Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, August 15, 2014

குடும்பஸ்திரிக்கு சுதந்திர தினம் ஒரு கேடு.....

 

காலையில் படுக்கையில் புரண்டு, நேற்று நடந்ததை அசை போட்டு, இன்று நடக்க வேண்டியதை திட்டமிட்டு, இவ்ளோ நேரம் படுத்தாச்சு போ என எழுந்திரிக்க முடிவெடுத்து 'ஆவ்வ்வ்' என சத்தமாக சோம்பல் முறித்து, என் இஷ்டத்துக்கு எழுந்திருக்க முடியவில்லை.

பல் விலக்கி முகம் கழுவியதுமே முதல் நினைவாக விளக்கேற்றி சாமி கும்பிட்டு திருநீறு வைக்க முடியவில்லை.

கெண்டைக்கால் தெரிவதை பற்றி கவலைப்படாமல் நைட்டியுடன் காலை மடக்கி உட்கார்ந்து, கிட்டத்தட்ட படுப்பதுபோல் குனிந்து, பக்கம் கசங்காமல் வரும் செய்தித்தாளை பக்குவமாக பிரித்து கண்களை ஈர்க்கும் தலைப்புச்செய்திகளை தேர்ந்தெடுத்து காபி பருகியவாறு விவரமாக படிக்க முடியவில்லை.

பிடித்த உப்புமாவோ, ஈஸியான தோசையோ, வேலையை ஐந்து நிமிடத்தில் முடிக்கும் இட்டிலியோ, ஒரே வேலையாக மதியத்திற்கும் சேர்த்து சாதமோ வைப்பது என் இஷ்டமாக  இல்லை.

நேரம் இருப்பதை வைத்து சட்னி, டிபன் குழம்பு, மதிய குழம்பு, ரசம் என எல்லாமே செய்வதோ, நேரம் போதாமல் டிபனுக்கு பொடிவைத்துகொண்டு, மதியத்திற்கு நெய், தயிர், ஊறுகாய் எடுத்துக்கொள்வதோ என் முடிவாக இல்லை

மாத விலக்கு நாட்களில் மட்டும் சாமி என்னை பாத்துக்காதா ? அப்பவும் என்னை பாத்துக்கும் ல. அப்படின்னா அந்த நாட்களிலும் தான் நான் சாமி கும்பிடுவேன் என்று சொல்ல முடியவில்லை.

காயப்போடாமல் பெட்டில் போடப்படும் துண்டை தூக்கி எறிய முடியவில்லை.

பிடித்த வேலைக்கு செல்ல முடியவில்லை

வேலை பிடிக்கவில்லை என்று விட முடியவில்லை

குளித்ததே வேஸ்ட் என்று சொல்ல வைக்கும் பஸ் பயண நெரிசல் எதற்கு? என்று நடந்து செல்லும் தொலைவில் அல்லது ரெண்டு நிமிட வண்டி பயண தொலைவில் வீடு எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பஸ் ஸ்டாண்டில் கடந்து செல்லும் வேகத்திலேயே படுக்க கூப்பிடும் ஆட்களை செருப்பால் அடிக்க முடியவில்லை

கர்ப்பம் ஆகிவிட்டால் தனக்கு வேலைக்கு ஆள் கிடைக்காதே என்று நான் கர்ப்பம் ஆக விரும்பாத முதலாளியம்மாவிடம் உன் மகளுக்கும் மருமகளுக்கும் இப்படியே வேண்டிக்கோ என்று சொல்ல முடியவில்லை

ரோட்டில் எச்சில் துப்பும் ஆட்களை சப்பென்று அறை  விட முடியவில்லை

பகலில் வண்டி ஓட்டும் ஆண்களிடம் 'லைட் எரியுது' என்று சொல்ல முடியவில்லை

 வீட்டுக்கு வந்ததும் கை கால் கழுவாமல் பெட், சோபாவில் கால் வைப்பவர்களை பார்த்து கத்த முடியவில்லை

நாள் முழுக்க வேலை செய்துவிட்டு வந்தாலும் நைட் சமையல் செய்ய பெரிய சலிப்பு ஒன்றும் இல்லாவிட்டாலும், பாத்திரத்தை கூட விளக்கி குடுக்க வராததற்கு கடுப்பாக முடியவில்லை

பாலையும் நானே தான் ஆத்தி குடுக்கணுமா ? இதைகூட செய்து கொடுக்காம டிவியே  கதி மொபைலே கதின்னு இருக்கியா ன்னு கேட்க முடியவில்லை

 பக்கத்தில் படுத்ததும் ஒரே ஒரு முத்தம் நெற்றியில் கொடுத்து 'எனக்காக எவ்ளோ செய்யற, எவ்ளோ மாறிட்ட' ன்னு சொல்லாமல், தூங்கிவிடும் வாழ்க்கை துணையை எழுப்பி நாலு கேள்வி கேட்க முடியவில்லை

எனக்கெல்லாம் சுதந்திர தினம் ஒரு கேடு.....

இருந்தாலும் இதை டைப் செய்ய சுதந்திரம் இன்னும் இருப்பதால் எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்....


 
 
இந்த பதிவை பார்த்துட்டு உடனே நாலு தேச பக்தர்கள் சுதந்திர தினத்தை போய்  கேடு அது இதுன்னு சொல்றியே இது நியாயமா தர்மமா ன்னு பொங்க வருவாங்க.  அதுவும் அத்தனை பேரும் ஆண்களா இருப்பாங்க. ஏன்னா அவங்க அத்தனை பேரும் வீட்டுல சுதந்திரத்தை அனுபவிக்கறாங்க.
 
ஒரு தற்கால சராசரி இந்திய பெண்ணின் சுதந்திர தினம் பற்றிய பார்வை இப்படி தான் இருக்கு. இதை அவர்கள் மறுத்தாலும் இது தான் உண்மை. வேணா உங்க அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகளை கேட்டு பாருங்க  உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டில் சுதந்திர உணர்வை பெண்களுக்கு கொடுங்க சகோ....

நன்றி....

Sunday, June 8, 2014

ஈழத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்

எனக்கு ஈழத்தில் யாரையும் தெரியாது

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த தோழன் தோழி கிடையாது

இப்படித்தான் ஈழம் இருக்கும் என்று
திரைப்படங்களிலும், பத்திரிகை செய்திகளில் இருந்தும் தான் தெரியும்.

ஈழம் பற்றிய செய்திகள் கோபத்தை உண்டு பண்ணும்
இயலாமையை உண்டு பண்ணும்
தலைக்குனிவை உண்டு பண்ணும்.

ஈழக் கொடுமைகளை படிக்க நேர்ந்தால் கண்ணீர் விடுவேன்
 
புலம் பெயர்ந்தவர்களின் நிலையைப் படித்தால் ‘பாவம்ல என்று இரக்கப்படுவேன்.

தமிழ்நாட்டில் இருந்தபடியே மானசீகமாக கைநீட்டி
இலங்கையில் இருக்கும் தமிழர்களை அணைத்து ஆறுதல் சொல்வேன்.

பிரபாகரன் எப்போது வருவார் என்று காத்துக்கொண்டிருப்பேன்.

மனித மிருகங்களை மானசீகமாக சுட்டுக்கொல்வேன்.

ராஜபக்ஷே சாக கடவுளிடம் வேண்டுவேன்.

அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்யாமல் இருந்தவர்களை ஆட்சி மாற்றுவேன்

இங்கே ஆசீர்வதிக்கப்பட்ட அமைதியை உணரும் போதெல்லாம்
இந்நேரம் என் மக்கள் அங்கே எப்படி இருப்பார்களோ என்று
அவர்களை நினைத்து ஏங்கி தவிப்பேன்.

இருந்தும் 
ஈழத்தமிழர் முகநூலில் friend request கொடுத்தால்
விடுதலைப்புலியாக இருக்குமோ என்று decline செய்வேன்.

வலை தளங்களில் ஈழம் பற்றிய செய்திகளை தவிர்த்து விடுவேன்

இந்த பதிவை பப்ளிஷ் செய்தால்
போலீஸ் வீடு தேடி வந்து
ஈழத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று
விசாரிப்பார்களோ என்று பயப்படுவேன்.

நான் என்ன செய்வது?
இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்.
ஏனெனில் நான் ஒரு டிபிகல் தமிழச்சி....


Tuesday, April 22, 2014

நீயா நானாவில் சாதாரணமானவள்


ஆமாங்க...
ஒருநாள் நீயா நானா பார்த்துக்கிட்டு இருக்கும்போது வழக்கம் போல 'நீயா நானாவில் கலந்து கொள்ள' அப்படின்னு போன் நம்பர் போட்டிருந்தாங்க. இத்தன வாய் பேசறோமே இங்க போய்  பேச மாட்டோமா அப்படின்னு போன் பண்ணிட்டேன். பிஸியாவே இருந்த போனில் ரொம்ப நேரம் கழிச்சு  லைன் கிடைச்சுது. 'உங்க பேரு, வயசு, என்ன பண்றீங்க, போன் நம்பர் இதெல்லாம் இந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்புங்க' அப்படின்னு சொல்லிட்டு வைச்சுட்டாங்க. நானும் அனுப்பினேன். ரொம்ப நாளைக்கு ஒண்ணும் தொடர்பு இல்லை. நானும் அவங்க மறுபடி போன் நம்பர் போட்டப்ப ரெண்டு மூணு தடவை இதே மாதிரி போன் பண்ணி அனுப்பினேன்.

திடீர்னு ஒருநாள் 'நாங்க விஜய் டிவியில இருந்து பேசறோம். நீயா நானால கலந்துக்க அப்ளை பண்ணி இருந்தீங்க இல்ல, உங்க டீடெயிலை ஒரு போட்டோவோட  மெயில் பண்ணிடுங்க.' அப்படின்னு போன் பண்ணிட்டாங்க. நானும் துள்ளி குதிச்சுகிட்டு,  இருக்கறதுலயே நல்ல டீசன்டான போட்டோவ அனுப்பி காத்துட்டு இருந்தேன். மறுபடியும் ரொம்ப நாளைக்கு ஒண்ணும் தொடர்பு இல்லை.நானும் விடறதா இல்ல. கலந்துக்க அப்ளை பண்ணிட்டே இருந்தேன்.

ஒருநாள் 'தம்பதிகள் கலந்து கொள்ள' ன்னு வந்துச்சு. டிவி முன்னாடி மொபைலும் கையுமா இருந்த என்னை எங்க வீட்டுக்காரர் அட ஹவுஸ் ஓனர் இல்லைங்க... என் புருஷரு (மரியாதை... மரியாதை...)பார்த்துட்டாரு.  'ஏய்... என்ன பண்ணிட்டு இருக்க... இதுல கலந்துக்க போறியா? நானெல்லாம் வரமாட்டேன். என்னை எல்லாம் கூப்பிடாத' அப்படியா இப்படியான்னு ஒரே பந்தா. அவரு கொஞ்சம் கூச்ச சுபாவம். எனக்கு நேர் எதிர். இதிலெல்லாம் கலந்துக்க நினைச்சு கூட பார்க்க மாட்டார். அதுக்காக நான் வேற ஆளையா  செட் பண்ணி கூட்டிட்டு போக முடியும்? சரி... இவரு அதுக்கு சரிபட்டு வர மாட்டார். அதனால் இந்த டாபிக்-க்கு நாம சரிபட்டு வரமாட்டோம் ன்னு விட்டுட்டேன். இருந்தாலும் வழக்கம் போல அப்ளை பண்ணிட்டே இருந்தேன்.


போன ஞாயித்துகிழமை ஒரு போன் வந்துச்சு. 'நாங்க விஜய் டிவி ல இருந்து பேசறோம். நீயா நானால கலந்துக்க அப்ளை பண்ணி இருந்தீங்க'ன்னு பழைய டயலாகே... சரி வழக்கம் போலதான் ன்னு நானும் பதில் சொல்லிட்டு இருந்தேன். பொசுக்குனு 'அரசியலை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு ' ஒரு கேள்வி. 'ஆஹா... இது வழக்கமான கேள்வி இல்லையேன்னு' ரெடி ஆகிட்டேன். அது சம்பந்தமான கேள்விகளுக்கு என் பதில்கள் ரொம்ப சுமாராவே இருந்துச்சு. அதனால அவங்களே இன்னொரு தலைப்பு இருக்கு மேடம். அதுல ட்ரை பண்ணுங்கன்னு சாய்ஸ் குடுத்தாங்க.

"திருமணத்துக்கு பின் மகளும் அப்பாவும் " ன்னு ஒரு தலைப்பு. இதுக்கு என்னால சுலபமா பேச முடிஞ்சுது. 'ஓகே மேடம் நீங்க செலக்ட் ஆகிட்டீங்க. புதன் கிழமை (9.4.2014) வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு உங்க அப்பாவோட வந்திடுங்க.' அப்படீன்னு சொன்னதும் எனக்கு சந்தோஷத்துல ஒரு நடுக்கம் வந்துச்சு பாருங்க... செம பீலிங்....

அப்பா கிட்ட 'இப்ப தான் ஆபரேஷன் பண்ணி இருக்கே? நீங்க வரமுடியுமாப்பா' ன்னு கேட்டேன். வீட்லயே சும்மா இருந்து ரொம்ப கஷ்டமா இருந்ததால அப்பா வர ரெடின்னு சொல்லிட்டார். உடனேயே டிரெயின் டிக்கெட் எல்லாம் சௌகரியமா புக் பண்ணி ரெடியா இருந்தோம். அப்பறம் 3 நாளா தினமும் சாயந்திரம் 4 மணிக்கு மேல போன் பண்ணி 'நிச்சயமா வந்துடுவீங்களா ? ப்ரோக்ராம் ல கலந்துக்க முழு வெள்ளை, முழு கருப்பு தவிர எந்த கலர்ல வேணா டிரஸ் போட்டுட்டு வாங்க.' அப்படின்னு விவரங்கள் கேட்டுகிட்டும்  குடுத்துகிட்டும்  இருந்தாங்க. நானும் என் பங்குக்கு 'விடிய விடிய ஷூட்டிங் நடக்குமாமே? 2, 3 மணி ஆகுமாமே' ன்னு கேள்விபட்ட விவரங்கள கேட்டேன். 'அப்படி எல்லாம் இல்லைங்க மேடம். பத்து மணிக்கெல்லாம் முடிஞ்சுடும்' ன்னு சொன்னாங்க.

செவ்வாய் கிழமை நைட்டே கிளம்பிட்டோம். ரூம்ல தங்கி இருந்துட்டு, புதன்கிழமை ஏவிஎம் ஸ்டுடியோக்கு போயிட்டோம். சென்ட்ரல் ஜெயில்ன்னு ஒரு செட் இருக்குமே... அதுக்கு பக்கத்து செட். நாங்க நுழையும்போதே காலைல இருந்து அந்த இன்னொரு தலைப்புக்கு (அரசியல்) ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. நாங்க அமைதியா எதிர்ல உக்காந்து பார்த்துகிட்டு இருந்தோம். விளக்கு போட்ட பிறகு தான் தெரிஞ்சுது அது ஒல்லி பெல்லி செட்ன்னு. எதிர் எதிர் செட் போட்டிருந்தாங்க. ஒரு நாலரை மணி சுமாருக்கு முதல் டாபிக் முடிஞ்சுது. கொஞ்ச நேரத்துல எங்களை ஒவ்வொருத்தர் பேரை சொல்லி கூப்பிட்டாங்க.

அப்பா உட்காரும் இடத்துக்கு நேர் எதிர்ல பொண்ணுங்க உக்காரணும். அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையே, மேல ஏற முடியாதே, கீழேயே உட்காந்துக்க்கலாம்னு நான் உக்கார்ந்துட்டு பார்க்கறேன் எங்க அப்பா மூணாவது வரிசைல போய் சாவதானமா உக்காந்துகிட்டார். (சரி சரி... உண்மைய சொல்லிடறேன்... அட கீழ உட்கார்ந்தா நாம கொஞ்சம் பளிச்சுன்னு தெரிவோமேன்னு நினைச்ச என் ஆசைல மண் அள்ளி போட்டுட்டு முகத்தை திருப்பிகிட்டார் மகராசன். )அவரை கீழ வந்து உக்காருங்கன்னு சொல்றேன், கண்டுக்காத மாதிரி திரும்பிகிட்டார். இங்கதான் உக்காரணும்னு இருக்கு போல இருக்குன்னு நானும் கடுப்பாவே உக்கார்ந்திருந்தேன்.

திடீர்னு தான் ஞாபகம் வந்துச்சு. அட, நமக்கெல்லாம் மேக்கப் பண்ணி விடுவாங்களா? நாங்களே பண்ணிக்கணுமான்னு கேள்வி வந்துச்சு. 'மேக்கப் பண்ணாம கேமரா முன்னாடியா ? ஓ  மை காட்' ன்னு ஓடிப்போய் அங்க இருந்த ஸ்டுடியோ  ஆளுங்ககிட்ட கேட்டேன். அவங்க 'நீங்களே தான் பண்ணிக்கணும்.' ன்னு சொல்லிடாங்க. ஓடி போய்  வாஷ்  ரூம்ல முகம் கழுவி குத்துமதிப்பா பொட்டு வெச்சுகிட்டு, தெரிஞ்சும் தெரியாம கொஞ்சமா  லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு வெளில வந்தா, 'இன்னும் என்ன இங்க இருக்கீங்க. அங்க எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க'ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க. அவசர அவசரமா போனதுல பவுடர் கூட அடிக்க முடியல. உண்மையா சொல்றேன்... பொண்ணுங்களை மேக்கப் பண்ணிக்க விடாம ப்ரோக்ராம் தொடங்குனதுக்கு 'நீயா நானா' டீம்க்கு கடுமையான கண்டனத்தை இந்த பதிவு மூலமா முன் வைக்கறேன்... (எங்க வயித்தெரிச்சல் உங்கள சும்மாவே விடாது சொல்லிட்டேன்...)

அவங்கவங்க இடத்துல உக்காந்த பிறகு, சும்மா கை தட்ட சொல்லி வீடியோ எடுத்தாங்க.ஒரு கால் மணி நேரத்துக்கு சிரிச்ச முகத்தோட இருக்க சொல்லி தனிப்பட்ட வீடியோ  எடுத்தாங்க. அதுக்கப்பறம் சுமார் 6 மணிக்கு நம்ம தானை தலைவர் கோபிநாத் வந்தார். அவரு மட்டும் முழு மேக்கப் ல இருந்தாரா.... செம கடுப்பாயிடுச்சு. இருந்தாலும் கேமரா முன்னாடி நம்ம கடுப்பை காமிக்க முடியாதே... அதனால அடக்கி வாசிச்சுகிட்டேன்.

வந்ததும் எல்லாருக்கும் கை எடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லி, சாப்பிட்டீங்களா ன்னு விசாரிச்சுட்டு அதுக்கப்பறம் தான் நிகழ்ச்சியை தொடங்கினார். நம்பவே முடியல, ரீடேக் எல்லாம் எடுக்காமலேயே நிகழ்ச்சி நாலரை மணி நேரம் கழிச்சு பத்தரைக்கு முடிஞ்சுது. இடையிடையே ரெண்டு பிரேக் . டீயும் கேக்கும் முறுக்கும் கொடுத்தாங்க.

சுமார் 20 கேள்வி கேட்டிருப்பார். நான் ஒரு பத்து கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன். அப்பா ஒரு ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லி இருப்பார். தேவை இல்லாம மைக் வாங்கி பேசல. தேவையானப்ப மைக் கிடைக்கல. மைக் கிடைச்சப்ப கேள்விய மாத்திட்டாங்க. எல்லா கூத்தும் நடந்துச்சு. ஆனா நல்லா இருந்துச்சு.

ஏனோ தெரியல, ப்ரேக் விட்டப்ப கூட யாரும் கோபிநாத் கிட்ட பேசல. அவரும் யார்கிட்டயும் பெர்சனலா பேசல. எனக்கு டைரக்டர் ஆண்டனி பத்தி நினைச்சாதான் ஆச்சரியமா இருந்துச்சு. அந்த ஒளி வெள்ளத்துல இருந்து விலகி, இருட்டுல உக்காந்துகிட்டு, இந்த நிகழ்ச்சியை கவனிச்சு, கோபிநாத் மூலமா தனக்கு வேணும்ங்கற பதிலை எங்க கிட்ட இருந்து வாங்க வெச்சு, அதை ஒருங்கிணைச்சு.... Amazing Man ....

அதே போல் கோபிநாத்தும்.. ஒரு பொண்ணு சொன்னாங்க, 'கோபி ஒண்ணுமே இல்ல. ஆண்டனி  தான் எல்லாமே சொல்லி குடுக்கறார்'ன்னு. ஆனா அது உண்மை இல்லை. ஒரு தனி ஆளா, கேமரா மேலயும் கவனமா இருந்து, எங்களையும் சமாளிச்சு, ஆண்டனியின் கேள்விகளுக்கும் பதில் வர வெச்சு, தன சுய கருத்துகளையும் சரியான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி, ஹப்பா.... Multi tasking ன்னா இதுதான்...

அரசியல் டாபிக் போன வாரம் ஒளிபரப்பினதால அனேகமா இந்த வாரம் ஞாயித்துகிழமை நைட் 9 மணிக்கு விஜய் டிவி ல நாங்க கலந்துகிட்ட டாபிக் ஒளிபரப்பப் படலாம். இந்த வீடியோ யூட்யுப் ல போட்டா, அதோட லிங்க குடுக்கறேன். மறக்காம பாருங்க.

என்னது? என் அடையாளமா? ஒரு வெள்ளையும் சிவப்பும் கலந்த கலர்ல சுடிதார் போட்டுக்கிட்டு மேல இருந்து 2வது வரிசைல இடமிருந்து நாலாவதா, முக்காடு போட்ட பொண்ணுக்கு வலது பக்கத்துல ஒரு அப்பாவி பொண்ணு உட்கார்ந்துட்டு இருப்பா. அவதான் ரொம்ப ரொம்ப 'சாதாரணமானவள் '.

Link இதோ : http://www.youtube.com/watch?v=Zm3VOyBsSF0
ஏற்கனவே சொன்ன மாதிரி ரொம்ப எதிர்பார்க்காதீங்க. முதல் கொஞ்ச நேரம் தான் பேசுவேன்.

Sunday, February 23, 2014

இப்போது நான் பாதி கார்டியாலஜிஸ்ட் (Part 2)


கோவை குப்புசாமி நாயுடு ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போனதும் அங்க தான் டாக்டர் எங்க அப்பா முன்னாடியே அம்மா கிட்ட  'எப்ப நெஞ்சு வலி வந்துச்சு என்ன ட்ரீட்மென்ட் குடுத்தாங்கன்னு' கேட்ட பிறகு தான் அப்பாவுக்கு விவரம் தெரிஞ்சுது. அதுக்கு பிறகு அவர் முகம் மாறிடுச்சு. எனக்கு பயங்கர  கவலை ஆகிடுச்சு. உடனே ஐ.சி.யூ க்கு  கூட்டிட்டு போய்ட்டாங்க.

அந்த ஹாஸ்பிடல் ல காலைல ஒருமுறை ரெண்டு பேர், சாயந்திரம் ஒரு முறை ரெண்டு பேர் மட்டும் தான் பேஷன்ட பார்க்க விடறாங்க. அதுவும் கையெழுத்து எல்லாம் வாங்கறாங்க. சும்மா எல்லாரையும் இஷ்டத்துக்கு உள்ள விடறது கிடையாது. ஒரு பெரிய வெய்டிங் ஹால் இருக்கு. டிவி இருக்கு. அங்க கம்முனு காத்துகிட்டு இருக்க வேண்டியது தான்.

அதே போல வெளியில இருந்து ஹாஸ்பிடலுக்கு உள்ளே வர்றதுக்கு சாயந்திரம் 4 மணி வரை வெயிட் பண்ணனும். மத்த நேரம் வெளில இருந்து உள்ளே வரணும்னா ஒரு கார்டு தர்றாங்க. ஒரு கார்டுக்கு 2 பேர் போகலாம். அங்க இருந்த 2 வாரமும் நாங்க ஒரு அஞ்சு பேர் உள்ளே இருந்துகிட்டு அந்த கார்டை உபயோகிச்ச லட்சணத்துல அந்த கார்டே இத்து போயிடுச்சுன்னா பார்த்துக்கங்களேன்...

சும்மா சொல்லக்கூடாது... நல்லா மெயின்டெயின் பண்றாங்க. நீட்டா இருந்துச்சு. வெளியில இருந்து உணவுப்பொருட்களை உள்ளே கொண்டுபோகக் கூடாது. அங்க யாராவது உங்களுக்கு தெரிஞ்சவங்க படுத்திருக்காங்கன்னு பார்க்க போனால் வெறும்கைய வீசிட்டு போங்க. மீறி கொண்டு போனால் நுழைவுலயே வாங்கி வெச்சுடுவாங்க.

ஐயையோ.. அப்பாவை அப்படியே விட்டுட்டேன் பார்த்தீங்களா... அப்பா ஐ.சி.யூ ல இருந்த வரைக்கும் அவரை அதிகமா பார்க்க முடியல.சொந்தக்காரங்க நண்பர்கள்ன்னு யாராவது வந்துகிட்டே இருந்தாங்க. அவங்கள மரியாதைக்காக எங்களுக்கு பதிலாஅனுப்பிகிட்டு இருந்தோம். அப்பறம் தான் 'அடடா அவருக்கு ஏதாவது வேணும்னா நம்ம கிட்ட தான கேப்பாரு'ன்னு திடீர் ஞானோதயம் வந்து , யார் பார்த்தாலும் சரி பாக்காட்டியும் சரின்னு, கண்டிப்பா அம்மாவ அனுப்பினோம். ஐ.சி.யூக்கு ஒரு நாள் வாடகை 5000.

முதல் நாள் சாயந்திரம் டாக்டர் வந்தார். பார்த்தார். எங்க எல்லாரையும் கூப்பிட்டார். 'ஐயாவுக்கு ரொம்ப சீரியஸா தான் இருக்கு. ஒண்ணும்  சொல்ல முடியாது. எங்களால ஆனதை செய்யறோம். அவ்ளோ தான் முடியும்'ன்னு சொல்லிட்டாரு. திரும்பி எங்க அம்மாவ பார்த்தா அவங்க மயக்கம் போடற ஸ்டேஜுக்கு போய்ட்டாங்க. இப்படியா மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லுவாங்க? கேக்கறவங்களுக்கு ஏதாவது ஆயிடாதான்னு கோவம் கோவமா வந்துச்சு. அம்மாவை வெளில கூட்டிகிட்டு வந்து 'டாக்டர் சொன்னா சொல்லிட்டு போறார் ம்மா. அவர் வேணும்னே நம்மள காசுக்காக பயமுறுத்தறார்.அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.' ன்னு எல்லாரும் சமாதானப்படுத்திட்டோம் . கொஞ்ச கொஞ்சமா அவங்களும் தைரியம் ஆகிட்டாங்க.

அன்னைக்கு சாயந்திரமே 'மூச்சு விட அவரால முடியல. தற்காலிகமா அவருக்கு பேஸ் மேக்கர் வைக்கறோம். அதுலயே சரி ஆகிடுச்சுன்னா ஓகே. இல்லாட்டி நிரந்தரமா வைக்கணும்'னு சொல்லிட்டாங்க. அதுக்கு ஒரு நாளைக்கு வாடகை 7000. அப்பறம் 2 நாள் கழிச்சு ஆஞ்சியோகிராம் பார்த்தாங்க. அதுக்கு 30,000 ன்னு நினைக்கறேன். ஒரு ட்யுபை கை நரம்பு வழியா உள்ளே விட்டு அதுல டை அப்படிங்கற மையை அனுப்பறாங்க. அந்த மை நெஞ்சுல வரும்போது அடைப்பு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கறாங்க. அதை ஒரு cd  ல தந்தாங்க. அதுல பார்த்து தெரிஞ்சுகிட்டோம். அதுல ஒரு பெரிய அடைப்பும், 2 சின்ன அடைப்பும் இருக்குன்னு சொன்னாங்க. பெரிய அடைப்புக்கு ஸ்டென்ட் போடணும். சின்னது ரெண்டையும் மாத்திரையிலேயே கரைச்சுடலாம்ன்னு சொன்னாங்க. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.

அப்பறம் இந்த ஆபரேஷனை செய்யணும்னா அதுக்கு முன்னாடி நிரந்தர பேஸ் மேக்கர் வைக்கணும். ஏன்னா தற்காலிக பேஸ் மேக்கர் அவர் பிரச்சனையை சரி பண்ணல அப்படின்னுட்டாங்க. வேற வழி ? அப்பறம் அந்த ஆபரேஷனையும் 2 நாள் கழிச்சு பண்ணினோம்.


 

நெஞ்சுக்கு மேலாக தோலை திறந்து சிம் கார்டு சைசுக்கு ஒரு மெஷினை உள்ளே வைக்கறாங்க. அது  யு.பி.எஸ் போல வேலை செய்யும். இதயம் நன்றாக துடிக்கும்போது அதற்கு வேலை இல்லை. இதய துடிப்பு தொய்வடையும் போது இது ஷாக் குடுத்து வேலை செய்ய வைக்கும். அவ்வளவு தான். இந்த செலவு ரூ. 1,30,000. இந்த ஆபரேஷனுக்கு அப்பறம் தான் அப்பாவை பக்கத்துலயே வெச்சு பார்க்கற மாதிரி வார்டுக்கு மாத்தினாங்க. அப்பாவை மறுபடியும் எப்ப வேணாலும் பார்க்கலாம்ங்கற பீல் இருக்கே... அதை மறக்கவே முடியாது.


நிரந்தர பேஸ் மேக்கரை உடனடியாக பணம் கொடுத்தும், ஆஞ்சியோ ப்ளாஸ்டை முதலமைச்சர் காப்பீட்டிலும் பண்ணினோம். இதுல ஆச்சரியம் என்னான்னா எங்க செலவுல பார்த்துகிட்ட வரைக்கும் மருந்து பில் ஒரு தடவைக்கு 1000 ரூபாய்களாவது ஆகும். காப்பீடு திட்டத்துக்கு மாற்றியதுல இருந்து 100, 150 ஐ தாண்டல. நிஜம். பொது வார்டில் வைத்து கவனித்து ஒரு நல்ல நாளில் ஆஞ்சியோ ப்ளாஸ்ட் செஞ்சாங்க.


முதலில் சொன்னது போலவே கை நரம்பு வழியாக ட்யுபை சொருகி பலூன் அல்லது ஸ்ட்ரா போன்ற ஒன்றை அனுப்பி அடைப்பு உள்ள இடத்தில் பொருத்தி அந்த பலூனை விரிக்கிறார்கள். ஒன்றை கவனிக்கவும். கொழுப்பாலான அடைப்பை நீக்குவதில்லை. ஜஸ்ட் அமுக்கி வைக்கறாங்க. அவ்வளவு தான்.பைபாஸ் என்றால் தான் நெஞ்சை பிளந்து அடைப்பை நீக்கறாங்க. ஆஞ்சியோவுக்கு ஆபரேஷன் நடந்த சுவடு கூட இல்லை. நிரந்தர பேஸ் மேக்கரை பொருத்திய சுவடு மட்டுமே அப்பாவுக்கு இருக்கு. ஆஞ்சியோ  பண்ணினாங்களா இல்லையான்னு கூட சுவடு தெரியாது. இதுக்கு செலவு ரூ. 60,000.

அப்பா பேரை போட்டு பேஸ் மேக்கர்க்கு ஒண்ணு , ஆஞ்சியோக்கு ஒண்ணு ன்னு ரெண்டு CD கொடுத்திருக்காங்க. இந்த ஆஞ்சியோ , பேஸ் மேக்கர் எல்லாம் ரகத்துக்கு ஒண்ணுன்னு இருக்கு. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விலை. பிரச்சனையை பொறுத்து நாம தேர்ந்து எடுத்துக்கணும். பேஸ் மேக்கர் 2,25,000க்கு கூட இருக்கு. தேவையான்னு நீங்க நினைக்கறதை பொறுத்தது.

நல்ல விஷயம் என்னன்னா ஆபரேஷன் நடந்த அரை நாளில் வீட்டுக்கு வந்துடலாம். அப்பா எதுக்கும் ஒரு நாள் இருந்து பார்த்துட்டு போலாம்னு இருந்துட்டு வந்தாரு. ஒரு மாசம் அடக்க ஒடுக்கமா டாக்டர் என்ன சொன்னாரோ அதை கேட்டு அப்படியே நடந்துக்கிட்டாரு. தினமும் வாக்கிங். ஒரு லிட்டர் அளவே தண்ணீர். எண்ணை  இல்லாமல் உப்பு குறைவாக உணவு. அப்பப்ப அம்மா கூடவும் என்கூடவும் சண்டைன்னு இப்ப எங்க அப்பா ஆரோக்கியமா இருக்கார் :)

பின் குறிப்பு:
மொத்த செலவும் ஒரு நாலரை இலட்சத்தை தாண்டியதாக கேள்வி.