Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, November 18, 2011

ஈரோடு ஆத்மா மின் மயான பாடல் வரிகள்

ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் இறந்தவர்களுக்கு கொள்ளிவைப்பதை ஒரு  கண்ணாடி சுவருக்கு பின்னே மற்ற உறவினர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த சடங்குகள் நடக்கும்போது ஒரு பாட்டு போட்டு விடுகிறார்கள். உண்மையில் மனதை உருக்கும் பாடல் அது. ஒரே முறை தான் ஒலிபரப்பப்படுவதால் அதை பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் பாடல் வரிகளை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

எஸ்.பி.பி. குரலில் லிங்காஷ்டகம் பாடலை கேட்டிருப்பீர்கள். (லிங்கம் லிங்கம் என்றே ஒவ்வொரு வரியும் முடியுமே. அந்த பாடல்..) அந்த டியுனில் இந்த பாடல் மிருதுவான குரலில் (பாம்பே ஜெயஸ்ரீ குரல் போல் உள்ளது) மெதுவாக, குறைந்த பின்னணி இசையுடன் பாடப்பட்டுள்ளது.

இதற்குமுன் அங்கே சென்ற என் நண்பர்கள் இந்த பாடலை பற்றி கூறி இருந்தார்கள். நான் அவர்களிடம் இந்த பாடலை முடிந்தால் பதிவு செய்து வருமாறு சொல்லி இருந்தேன். ஆனால், முதன்முறையாக என் ஆயாவின் இறப்பின்போதுதான் அங்கே சென்றேன்.கேட்டேன். கண்முன்னே இழந்த சொந்தம் எரிந்துகொண்டிருக்கும்போது எங்களை தேற்றுவது போல் அந்த பாடல் இருந்தது. அந்த நிலையில் பாடலை பதிவு செய்ய முடியவில்லை. தோன்றவும் இல்லை. ஆனால் அந்த வரிகள் மாயையின் பக்கத்தை காட்டுவதாக இருந்ததால் வரிகளை மட்டும் படம்பிடித்துக்கொண்டு வந்தேன்.

இதோ அந்த பாடல் வரிகள் :

பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீயுண்டது என்றது  சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுரும்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதுமில்லை
நதிமழை போன்றது விதியென்று கண்டும்
மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதை ஆகும்
 
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதையொன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியை போலொரு மாமருந்தில்லை

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
 
இந்த பாடல் யாருக்காவது ஒலிவடிவமாக கிடைத்தால் எனக்கும் அனுப்புங்களேன்...

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

விதையொன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

kavitha said...

இந்த பாடல் பற்றி என்னிடம் மூன்று பேர் சொல்லிட்டாங்க. பாட்ட கேட்டா நம்மையும் அறியாம நம்ம வாழ்கையப் பத்தி ரொம்ப யோசிக்க வைக்குதுன்னு. உங்க மூலமா எழுத்து வடிவமா பார்த்த போது ரொம்ப நெகிழ்வா இருக்கு

Anonymous said...

மனதை உருக்க கூடிய வரிகள் , நாம் பிறந்ததன் அர்த்தத்தை உணர கூடிய வரிகள், இயற்கயுடைய சக்தியை உணர கூடிய வரிகள், வரி வடிவமாக பாடலை தந்ததற்கு என் மனமார்ந்த நன்றி.

majeed said...

மரணம் உண்மையான உண்மை

JCI Tiruchengode Temple said...

http://www.youtube.com/watch?v=0eHZnJ95ln0