Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, November 24, 2011

இழவு வீடு - கவிதை


இழவு வீடு

ஒவ்வொரு
இழவு வீடும்
பெருங்குரலோடுதான்
துக்கத்தை வெளிப்படுத்த
ஆரம்பிக்கின்றன.

பெண்கள்
ஒப்பாரி வைக்க
ஆண்கள்
அழுகையை அடக்கிக்கொண்டு
வெளியில் போய்
நிற்கிறார்கள்

நாட்டமை போலும்
ஒரு உறவினர்
தொலைபேசி மூலம்
தொலைதூர சொந்தங்களுக்கு
செய்தி தருகிறார்

அக்கம்பக்கம்
முதலில் வந்து
துக்கம் விசாரிக்க
மெதுவாய் கூடுகிறது
கூட்டம்

இறந்தவரை
நடுவீட்டில் வைத்து
மாலையிட்டு மரியாதை செய்து
சுற்றிலும் அமர்ந்து
ஒப்பாரி வைத்து
புகழ் பாடத்
தொடங்குகிறார்கள்

சுமார் ஒரு மணி நேரம்
கழிந்தபின்
அக்கம்பக்கம்
அகலுகிறது
சொந்த பந்தம்
நெருங்குகிறது
பெருங்குரல் அழுகை
கேவலாகிறது

மகள், மருமகளின்
கண்கள் மெதுவாக
அடுத்தவர் முகம் பார்க்க ஆரம்பிக்கிறது
வாய் மெதுவாக
இறந்தவர் எப்படி இறந்தார் என
காரணம் சொல்ல ஆரம்பிக்கிறது
தன்னால் கவனித்துக்கொள்ள இயலாத
குற்ற உணர்வை மனம் ஒத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது

இன்னும் சிறிது நேரமாகிறது
அழுதுகொண்டு வருபவர்களுடன் மட்டும்
அழுதுகொண்டு...
மற்றபடி
மௌனம் காத்துக்கொண்டு....

இன்னும் கொஞ்ச நேரம் கழிகிறது
தெரிந்தவர்கள் வர ஆரம்பிக்கின்றனர்
கண்களும் உடலும்
களைப்புடன் வரவேற்க தொடங்குகிறது
மிக நுண்ணிய புன்னகை
தென்பட தொடங்குகிறது
மெதுவாக நலம் விசாரிப்புகளும்
இடம் பிடிக்கின்றன

மேலும் சில காலம் நகர்கிறது
தத்தம் குடும்பத்தார்
நலன் நாடி
வெளியேயாகினும் சென்று
உணவு உட்கொள்ள
ரகசிய கட்டளைகள் பறக்கின்றன

முதலில் பச்சைத்தண்ணீர் கூட
குடிக்க மறுத்த உதடுகள்
இப்போது காப்பி தண்ணீர்
கொண்டு வர சொல்கின்றன

குடித்தவாறு மெதுவே ஆரம்பிக்கும்
வந்தவர் வராதவர் குறிப்புகள்
இறந்தவர் குடும்ப எதிர்காலம்
இன்னும் ஏதேனும் ரகசியம்
பிணம் எடுக்கும் நேரம்
பின்னே சென்று வழியனுப்புதலும்

அத்தனையும் முடித்து
தத்தம் வீடு சென்று
சுத்தமாக குளித்து
சாவதானமாக கட்டிலில் சாய்ந்து
சொடுக்குவார் டிவி ரிமோட்டை
இன்று நாடகம் என்ன ஆச்சோ தெரியலை என்று
தான் ஆடிவந்த நாடகம் மறந்து...
 
ரொம்ப நாளைக்கு முன்னாடியே எழுதிய கவிதை. (கவிதையா?)  Situation Posting.

Friday, November 18, 2011

ஈரோடு ஆத்மா மின் மயான பாடல் வரிகள்

ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் இறந்தவர்களுக்கு கொள்ளிவைப்பதை ஒரு  கண்ணாடி சுவருக்கு பின்னே மற்ற உறவினர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த சடங்குகள் நடக்கும்போது ஒரு பாட்டு போட்டு விடுகிறார்கள். உண்மையில் மனதை உருக்கும் பாடல் அது. ஒரே முறை தான் ஒலிபரப்பப்படுவதால் அதை பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் பாடல் வரிகளை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

எஸ்.பி.பி. குரலில் லிங்காஷ்டகம் பாடலை கேட்டிருப்பீர்கள். (லிங்கம் லிங்கம் என்றே ஒவ்வொரு வரியும் முடியுமே. அந்த பாடல்..) அந்த டியுனில் இந்த பாடல் மிருதுவான குரலில் (பாம்பே ஜெயஸ்ரீ குரல் போல் உள்ளது) மெதுவாக, குறைந்த பின்னணி இசையுடன் பாடப்பட்டுள்ளது.

இதற்குமுன் அங்கே சென்ற என் நண்பர்கள் இந்த பாடலை பற்றி கூறி இருந்தார்கள். நான் அவர்களிடம் இந்த பாடலை முடிந்தால் பதிவு செய்து வருமாறு சொல்லி இருந்தேன். ஆனால், முதன்முறையாக என் ஆயாவின் இறப்பின்போதுதான் அங்கே சென்றேன்.கேட்டேன். கண்முன்னே இழந்த சொந்தம் எரிந்துகொண்டிருக்கும்போது எங்களை தேற்றுவது போல் அந்த பாடல் இருந்தது. அந்த நிலையில் பாடலை பதிவு செய்ய முடியவில்லை. தோன்றவும் இல்லை. ஆனால் அந்த வரிகள் மாயையின் பக்கத்தை காட்டுவதாக இருந்ததால் வரிகளை மட்டும் படம்பிடித்துக்கொண்டு வந்தேன்.

இதோ அந்த பாடல் வரிகள் :

பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீயுண்டது என்றது  சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுரும்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதுமில்லை
நதிமழை போன்றது விதியென்று கண்டும்
மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதை ஆகும்
 
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதையொன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியை போலொரு மாமருந்தில்லை

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
 
இந்த பாடல் யாருக்காவது ஒலிவடிவமாக கிடைத்தால் எனக்கும் அனுப்புங்களேன்...

Wednesday, November 16, 2011

ப்ச்... அடுத்த இழப்பையும் சந்தித்தாயிற்று...

ப்ச்... அடுத்த இழப்பையும் சந்தித்தாயிற்று...

என் அம்மாவின் அம்மா தன்னுடைய 95 வது வயதில் 8.11.11 அன்று எங்கள் இல்லத்தில் காலமானார்.

ஆறு மகன்கள் இரண்டு மகள்களை பெற்றெடுத்து, பன்னிரண்டு பேரன் பேத்திகளை வளர்த்து, ஆறு கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்திகளை கண்ட எங்கள் பாட்டி எங்களை விட்டு பிரிந்தார்.

பாட்டியை நாங்க ஆயா என்று தான் அழைப்போம். யாராலும் எங்க ஆயாவை வெறுக்க முடியாது. நீங்க வந்து எங்க ஆயா முன்னாடி நின்னா, முதலில் எங்க ஆயா 'நூறாண்டு காலம் வாழ்க. எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும்' என்று முதலில் வாழ்த்தி விட்டுதான் யார் என்ன என்று விசாரிப்பாங்க. நீங்க  கிறிஸ்துவராக இருந்தால் ஸ்தோத்திரம் சொல்லி வாழ்த்துவாங்க. ஹிந்துவாக இருந்தால் முருகன் பெயரில் வாழ்த்துவாங்க.

ஒருவரையும் குறை சொன்னது கிடையாது. கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள முடியாத மாமாக்களை கூட விட்டுகொடுத்து பேசியது கிடையாது. அத்தனை மருமகள்களும் உசத்தி தான்.
பெரிய குடும்பத்தில் பிறந்து, பெரிய குடும்பத்தில் திருமணமாகி வந்து, பன்னிரண்டு குழந்தைகளை பெற்று (4 பேர் குழந்தையிலேயே இறந்துவிட்டார்கள்) அவர்கள் குழந்தைகளையும் வளர்த்து, கூட்டத்திலேயே இருந்த அந்த பெண்மணிக்கு, அனைவரும் தனிக்குடித்தனம் போய்விட்டதில் வருத்தம். ஆயா சகல சௌகரியங்களுடன் இருந்தாலும், தனியாகதான் இருந்தாங்க. தனிமை அவங்கள ரொம்ப உருக்கி இருந்தது.

மகன்களுக்கு தனிதனி குடும்ப பொறுப்புகள் இருப்பதால் அவர்களால் ரெகுலராக வரமுடியாததை, கவனித்துக்கொள்ள முடியாததை ஏற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் ஏங்கிக்கொண்டும் இருந்தார். நான் கூட அவருடைய தனிமையை பொறுத்துக்கொள்ள முடியாமல், "ஆயா, முதியோர் இல்லத்துல போய் இருக்கீங்களா? உங்களுக்கு நல்லா பொழுது போகும். நாங்க வந்து இதே மாதிரி பார்க்கறோம்" என்று சொல்லி இருக்கிறேன். உண்மையில் பார்த்துக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டு அல்ல. அவரது தனிமையை போக்கவே அப்படி சொன்னேன். உடனே ஆயா கோபமாக, " ம்க்கும்... ஆறு பசங்கள வெச்சுகிட்டு நான் போய் முதியோர் இல்லத்துல இருக்கறதா? நல்லா சொன்ன போ..." என்று என்னை தான் திட்டுவாங்க. 

போட்டோ என்றால் அவ்வளவு கொள்ளை பிரியம். போட்டோ எடுக்கலாம் என்றால் உடனே எழுந்து புடவையை நீவி, பார்டர் தெரியுமாறு எடுத்துவிட்டு, தலைமுடிகளை ஒதுக்கி, திருநீறு  இட்டுக்கொண்டு, நீட்டாக அமர்ந்து, போஸ் தருவாங்க. புதுப்புடவை கட்டினால் எதிரே இருக்கும் போட்டோ கடைக்கு கூட்டிட்டு போய் போட்டோ எடுக்கணும். இல்லாட்டி, போட்டோக்ராபர் வீட்டுக்கு வந்து போட்டோ எடுக்கணும். சில சமயம்  'கடை லீவுங்க ஆயா' என்று பொய் சொல்லிவிடுவோம். அந்த சமயங்களில் மொபைலிலோ, டிஜிட்டல் கேமராவிலோ போட்டோ எடுக்க வேண்டும். ஒரு full size, ஒரு Bust size, இருக்கும் ஆட்களுடன் group photo. இது தான் அவங்களோட regular style . தன் இறப்புக்கு கூட போட்டோ வீடியோ எடுக்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். :-(

ஆசையும் இவ்வளவுதான்னு இல்லாம அவ்வளவு ஆசை படுவாங்க. வயசுக்கு ஏத்த மாதிரி ஆசைய குறைச்சுக்குவாங்கன்னு பார்த்தா, சாகற வயசு சாகற வயசுன்னு இன்னும் அனுபவிக்கதான் ஆசைபட்டாங்க. ஆசை குறைஞ்சாதான் மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வரும்னு எல்லாரும் சொல்லியும் அவங்க அதை கடைசிவரை கண்டுக்கவே  இல்ல.

தன் எட்டு குழந்தைகளிலும், என் அம்மாதான் ஆயாவுக்கு எப்பவும் ஸ்பெஷல். பன்னிரண்டு பேரன் பேத்திகளிலும் நான்தான் ஸ்பெஷல். எனக்கு அடிபட்ட போது என்னை பார்க்கவந்த ஆயா, மறுபடியும் தன் பையன்கள் வீட்டுக்கு போகமாட்டேன் என்று உறுதியாக சொல்லி, நான் செத்தால் தான் இந்த வீட்டை விட்டு போவேன் என்று கூறி இருந்தார்கள்.

மகன்கள் வந்து 'நம்ம வீட்டுக்கு போலாம் வாங்க. ஆட்டோ நிக்குது ' என்று விளையாட்டாக கூப்பிடும்போது, கண்ணை மூடிக்கொண்டு 'பலவீனமா இருக்கு. ஆட்டோ ஏறமுடியாது. இங்கயே இருக்கேன்' என்று நடிப்பதை பார்த்து வாய் விட்டு சிரித்திருக்கிறோம்.

பகலில் எல்லாம் எங்க சோபால தான் படுத்திருப்பாங்க. நான் தலைவலின்னு சொன்னபோது, என்னை மடியில் படுக்க வைத்து தலையை மிருதுவாக பிடித்து விட்டது அவ்வளவு ஆறுதல்.... இனி எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போவதே இல்லை....

ஒவ்வொரு முறை டீ, காபி குடிக்கும்போதும், ஒவ்வொருமுறை உணவருந்தும்போதும், நான் சாப்பிட்டேனா என்று கேட்காமல் சாப்பிட்டதே இல்லை. நான் லேட்டாக சாப்பிடும் ஆள் என்பதால், நான் சாப்பிடும்போது என்னுடன் சேர்ந்து மறுபடியும் கொஞ்சமாவது சாப்பிடுவாங்க. இளநீர், கால் சூப் ரெண்டும் எங்க ஆயாவுக்கு பூஸ்ட் மாதிரி. பேருக்கு குடித்துவிட்டு, எனக்கு கொடுக்க சொல்லிடுவாங்க.

கடைசி இந்த இரண்டு மாதங்கள் என் அம்மா எங்கள் வீட்டிலேயே ஆயாவை வெச்சு பார்த்துக்கிட்டாங்க. கடந்த 31 ம் தேதியிலிருந்து ஆயா சரியா சாப்பிடாம ரொம்ப பலவீனமானதால், அம்மா மாமாவை வர சொல்லி, ஹாஸ்பிடல்ல சேத்திட்டாங்க. டாக்டர்  viral infection  ன்னு சொல்லி நாலு நாள் treatment குடுத்திட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க.

எங்க ஆயா இது மாதிரி பல முறை சீரியஸ் கண்டிஷன்ல இருந்திருந்ததால், இந்த முறை யாரும் அவ்வளவாக நெகடிவா நினைக்கலை. ஆயா எப்படியும் பிழைச்சிடுவாங்கன்னு   தான் இருந்தோம். ஆனா, 8 ம் தேதி விடியற்காலை 2.30 மணியளவில் இறந்துட்டாங்க.

இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும்போது, நான் உண்மையில் சாதாரண மனநிலையில் தான் இருந்தேன். ஆயா என்னை எவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்று அவரை பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் எழுதும்போது தான் தெரிகிறது. உண்மையில் எனக்கு இப்போது குற்ற உணர்வே மேலெழுகிறது. அவர் என்னை நேசித்த அளவு நான் அவரை நேசித்திருக்கவில்லை. இப்போது என் கண்களில் இருந்து வழியும் நீர்த்துளிகளை அவரின் நேசிப்புக்கு அர்ப்பணிக்கிறேன்.

இவங்க இறந்த நாளில் தான் பலவருடங்களாக பார்க்காமல் இருந்த சொந்த சித்தப்பா பெரியப்பா பசங்களை ஒருத்தருக்கொருத்தர் சந்தித்துக்கொண்டார்கள். (நானும் சிலரும்  எல்லோருடனும் எப்போதும் தொடர்பில் தான் இருக்கிறோம்). பல வருடங்களுக்கு முன் சண்டை போட்டிருந்த மாமாக்கள், அத்தைகள் எல்லோரும் ஆயாவின் இறப்பில் ஒன்று சேர்ந்து ஆயாவை வழியனுப்பி வைத்தார்கள். எல்லோரும் சேர்ந்து பழைய கதைகள் பேசிக்கொண்டிருந்தபோது, எப்பேர்பட்ட கூட்டுக்குடும்ப வாழ்கையை மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று எல்லோரும் உணர்ந்தோம். அதனால் இனி வருடம் ஒருமுறை ஒரு கெட் டு கெதர் ஏற்பாடு செய்து, எல்லோரும் கண்டிப்பாக கலந்துகொள்ள முடிவெடுத்து உள்ளோம்.

எங்க ஆயா விரும்பியது அதுதான்.... "என் மக்கள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும்"