Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, October 20, 2011

விபத்து... நடந்தது என்ன? (I am Back - மூன்றாம் பாகம்)

போன பதிவின் தொடர்ச்சி என்பதால் அந்த பதிவை இங்க கிளிக் பண்ணி படிச்சுட்டு இங்க வாங்க நண்பர்களே ..

வழக்கம்போல செவ்வாய்கிழமை வந்தது. என் தோழி 'பெருந்துறைல இருக்கற அந்த பொண்ணு  ஊருக்கு போய்ட்டதால, இந்த முறை அங்க வண்டி கிடைக்காது. அதனால எப்பவும் போல இல்லாம  இன்னைக்கு நாம நம்ம வீட்ல இருந்தே என் வண்டில போலாம். பெருந்துறை வழியா சுத்திட்டு போக வேணாம். போன முறை போலிஸ் கிட்ட மாட்டினது வேற சங்கடமா இருக்கு. அதனால வெள்ளோடு வழியா போலாம்'ன்னு சொன்னா. நானும் சரின்னு சொல்லிட்டேன். 

முருகனுக்கு விளக்கு போட வழக்கமா விளக்கு வாங்கற கடைல விளக்கு வாங்கிட்டு அவ திரும்பும்போது பால் பாக்கெட் வச்சிருக்கற டப்பால கால் தடுக்கி தாய்மண்ணை முத்தமிட போனா. தடுத்து புடிச்சு, 'என்னடி தடுக்குது. அடுத்த வாரம் போய்க்கலாமா?'ன்னு கேட்டேன். 'அட இதுக்கெல்லாம் பயந்துகிட்டு. வா. போலாம்'ன்னா. 

சரின்னு நானும் பேசாம வண்டில உக்காந்துகிட்டேன். அடுத்து அம்மணி கோர்ட்ல ஏதோ வேலைன்னு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனா. நான் உள்ள வரலைன்னு சொல்லி வெளிலே வெயிட் பண்ணிட்டிருந்தேன். திரும்பி வந்து வண்டிய ஸ்டார்ட் பண்ண போகும்போது அவளோட கொலுசு கட் ஆகி நழுவி விழுந்துச்சு. 'ஏய், ரெண்டாவது சகுனமும் முருகன் காமிச்சுட்டாண்டி. வீட்டுக்கு போலாம்'ன்னு நான் சொன்னேன். அதுக்கு அவ, 'மூணாவது சகுனமும் காமிச்சுட்டா உன்ன அங்கேயே பஸ் ஏத்தி வீட்டுக்கு அனுப்பிடறேன். போதுமா'ன்னு சொன்னா. சரின்னு அரை மனசோட வண்டில உக்காந்தேன்.
வண்டி நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. இது புது வழிங்கறதால, சென்னிமலை போறதுக்குள்ள ரெண்டு மூணு முறை வழி தவறி திரும்பி திரும்பி சரியான வழி கேட்டு  போனோம். போக போக, அவ 'ஆமா, எப்ப பார்த்தாலும் நானே வண்டி ஓட்டிகிட்டு இருக்கேனே, நான் என்ன உனக்கு டிரைவரா? திரும்பி வரும்போது நீதான் ஓட்டனும்'ன்னு திட்டிகிட்டே வந்தா. 

actually , எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. அதனால எங்க அப்பா என்மேல care பண்றேன் பேர்வழின்னு, என்னை பொத்தி பொத்தி தான் வளர்ப்பார். (அதனால நல்லது நடந்ததை விட கெட்டது நடந்தது தான் ஜாஸ்திங்கறது வேற விஷயம்). இப்படிப்பட்ட அப்பாவ மீறி  நான் இப்ப தான் வண்டி வாங்கி கொஞ்ச நாளா தான் ஓட்டிகிட்டு இருக்கேன். டபுள்ஸ் வைக்கறதுன்னா 'நான் வண்டி ஓட்ட பழகிட்டு இருக்கேங்கற விஷயம்' யாருக்கு தெரியாதோ அவங்கள வெச்சுதான் ஓட்டுவேன். இந்த விஷயமெல்லாம் இவளுக்கும் தெரியும். தெரிஞ்சும் இந்த முறை கண்டிப்பா வண்டி ஓட்டியே தீரணும்னு கட்டளையே போட்டுட்டா. 

சென்னிமலை போனோம். முருகனை தரிசிச்சோம். திரும்பி வரும்போது, மலைல இருந்தே ஓட்ட சொன்னா. உனக்கு உயிர் மேல பயம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் எப்படி ஓட்டுவேன்னு எனக்கு தெரியும்.  ஊருக்கு வெளில வந்தபிறகு வேணா நான் ஓட்டறேன்'ன்னு சொல்லிட்டேன். ரெண்டுபேரும் மலைல இருந்து இறங்கி, பேக்கரில பப்ஸ் சாப்ட்டுட்டு, போற வழில பசிச்சா சாப்பிட முறுக்கு பாக்கெட் வாங்கி வண்டில போட்டுட்டு வண்டிய கிளப்பினோம். வண்டி சிட்டி லிமிட்ட தாண்டி வெள்ளோடு பிரிவுல திரும்பினதும், வண்டிய நிறுத்தி என்கிட்டே குடுத்தா. 

அவ குண்டு பக்கடி. நான் ஒல்லி பிச்சான். நான் டிரைவர் சீட்ல உக்காந்ததும், இவ உக்கார போனா. நான் வண்டிய கீழ போட போனேன்... (முருகன் மூணாவது சகுனம் காட்டினது எங்களுக்கு தெரியாம போய்டுச்சு). கெக்கேபெக்கேன்னு  சிரிச்சுகிட்டு மறுபடியும் பேலன்ஸ் பண்ணி வண்டி எடுத்து ஓட்ட ஆரம்பிச்சோம். இத்தனைக்கும் ஸ்பீடாமீட்டர் 25 தாங்க காமிச்சுச்சு. ரொம்ப ஸ்பீடாவெல்லாம்  போகலைங்க.

ஒரு ரெண்டு கிலோமீட்டர் தான் போய் இருப்போம். அசோகபுரம்னு ஒரு ஏரியா வந்துச்சு. ரோடு அகலம் கொஞ்சம் குறைவு. ஒரு வளைவு வேற. ஒரு அம்மா தண்ணி எடுத்துட்டு வந்துட்டு இருந்தாங்க. அவங்க கூட ஒரு அஞ்சு ஆறு வயசுல ஒரு சின்ன பொண்ணு. அந்த பொண்ணு அவங்க அம்மா கைய உதறிட்டு ரோட கிராஸ் பண்ண பார்த்துச்சு. நான் ஹார்ன் அடிக்கறேன். வந்துடாதன்னு தலைய வேற ஆட்றேன். அது எங்கள பார்த்து சிரிச்சுகிட்டே குடுகுடுன்னு ரோட கிராஸ் பண்ண வந்துடுச்சு. என் பிரெண்டு கத்தறா. நான் ப்ரேக் போட்டா, என் பிரெண்டு கண்டிப்பா விழுந்துடுவா. பக்கமா போய்ட்டதால அந்த குட்டி பொண்ணு கண்டிப்பா நின்னுடும். நாம நிறுத்தவேணாம்ன்னு நினைச்சு ப்ரேக் போடலாமா வேணாமா ன்னு யோசிச்சு கிட்டே வண்டிய ஓட்டறேன் (இந்த இடத்துல திட்டாதீங்க ப்ளீஸ்). 

இந்த நேரத்துல, ஒண்ணா அந்த பொண்ணு கிராஸ் பண்ணி இருக்கணும். இல்லாட்டி அப்படியே நின்னிருக்கணும். வண்டி பக்கத்துல வந்ததும், அந்த பொண்ணு தேவை இல்லாம  ஒரு செகண்ட் நின்னு, கரெக்டா வண்டில இடிக்கற நிலைலேயே வந்துட்டா. நான் ப்ரேக்கையும் பிடிச்சுட்டேன். ஆனா, நான் அவசரத்துல புடிச்சது பிரன்ட் ப்ரேக். சடார்ன்னு ஒரு சவுண்ட். 'ஆ.... அம்மா........' ன்னு அந்த பொண்ணோட அலறல். நானும் என் ப்ரெண்டும் கத்தினமான்னு ஞாபகம் இல்ல. 

அடுத்த செகண்ட் அந்த பொண்ணு அந்த இடத்துலயும், என் பிரெண்ட் ரெண்டு பல்டி அடிச்சு புல்வெளி பக்கமாவும், நான் ஒரு அரை நிமிஷத்துக்கு சறுக்கிகிட்டே ரோட்டு பக்கமாவும் விழுந்தோம். (அந்த அரைநிமிஷம் 'போச்சுடா. நாம கொலை கேசுல மாட்டிகிட்டோம்'ன்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். கூடவே அந்த ரணகளத்துலயும்  தலைல அடிபட்டுட கூடாதுன்னு தலைய தூக்கிகிட்டேன்)  வண்டி என் கால்ல விழுந்து என்னால எந்திரிக்க முடில. என் பிரெண்டு அந்த பொண்ண 'அறிவு இருக்கா அப்படியா இப்படியா'ன்னு திட்டிகிட்டு இருக்கா. அங்க இருந்த கொஞ்சநஞ்ச பேர் உடனடியா திரண்டு எங்களை எல்லாம் தூக்கிட்டாங்க. அந்த சின்ன பொண்ணுக்கு நல்ல வேளை ஒண்ணும் ஆகல. தலைல வலி மட்டும்தான்னு சொல்லுச்சு. அப்ப ஒரு மகராசன் சொன்னாரு , " இந்த பொண்ணுங்க மேல தப்பு இல்ல. அந்த சின்ன பொண்ணுதான் திடீர்னு கிராஸ் பண்ணிடுச்சு"ன்னு . எனக்கு அப்பாடான்னு ஆகி போச்சு. அப்படின்னா கொலைகேசுல இருந்து தப்பிச்சுட்டோம்னு திருப்தி வந்துச்சு.

ஆனா,  இதைவிட பெரிய பிரச்சனைய சந்திக்க போறோம்ன்னு அப்ப எனக்கு தெரியல.அவ வீட்லயாவது பரவாயில்ல. வண்டில போறோம்ன்னு தெரியும். நாங்க வண்டில போறோம்ன்னு எங்க வீட்ல சொல்லாம தான வந்திருக்கோம்.  ரத்த சகதியா நிக்கற நான், ஸ்ட்ரிக்டா இருக்கற எங்க அப்பாகிட்ட எப்படி சொல்லுவேன்? என் முகத்தில் மெதுவாக பீதியின் நிழல் படர்ந்தது.

(அடுத்த பதிவில் முடிக்க முயற்சி செய்கிறேன். தொடரும்)
ஒரு  டவுட்: இன்ட்லி வோட்டு பட்டன் ஏன் work ஆவதில்லை?

Tuesday, October 18, 2011

I am Back - இரண்டாம் பாகம்

இதற்கு முந்தைய பதிவை படிக்க இங்கே செல்லவும்

அந்த இன்ஸ்பெக்டர் 'இந்த பொண்ணு யாரு?'ன்னு கேள்வி கேக்கவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. என் தோழியோ 'இவ யாருன்னே தெரியாது'ங்கற ரேஞ்சுக்கு முழிக்க ஆரம்பிச்சுட்டா. அப்பறம் சுதாரிச்சுகிட்டு 'என் பிரெண்டுங்க சார்' ன்னு சொன்னா. அவர் விடுவேனான்னு 'என்ன பண்ணிட்டு இருக்காங்க?' ன்னு கேட்டார். நான் நாய் வாய் வெச்ச மாதிரி பல வேலைகள் செய்றதால இவளுக்கு எதை சொல்லறதுன்னு யோசனையா இருந்துச்சு. ஆளாளுக்கு மாத்தி சொல்லிட்டா மாட்டிக்குவோமேன்னு வேற ரெண்டு பேருக்கும் பயம். அப்பறம் நான் 'ஸ்போக்கன் இங்கிலீஷ் டீச்சர்னு சொல்லு'ன்னு மெதுவா சொல்லவும், அவளும் அதை சொன்னா. (actually நான் ஒரு ஸ்டுடன்ட் மாதிரி தான் இருப்பேன்ங்கறது வேற விஷயம்).    'டீச்சர்' அப்படிங்கற வார்த்தைக்கு இன்னும் மரியாதை இருக்குன்னு அன்னைக்கு நான் தெரிஞ்சுகிட்டேன். 

அதுக்கப்பறம் அவர் கொஞ்சம் தன்மையா வார்ன் பண்ணினார். 'ஏம்மா, ரெண்டு பேரும் படிச்சிருக்கீங்க. நீங்களே கொஞ்சம் கூட awareness  இல்லாம நடுக்காட்டுல இப்படி நிக்கறீங்களே... அப்பறம் படிக்காதவங்க எப்படி நடந்துக்குவாங்க? இந்த பசங்கள சின்ன பசங்கன்னு நீங்க நினைக்கறீங்க. ஆனா இவனுங்க வெச்சிருக்கற இந்த வண்டி, போன் எதுவும் இவங்களோடது இல்ல தெரியுமா? நேத்து நைட் இதே ரோட்ல chain snatching  நடந்திருக்கு. அதுக்குதான் நாங்க patrol வந்துட்டு இருக்கோம். இப்படி எல்லாம் நிக்காதீங்க. கிளம்புங்க'ன்னு சொன்னது தான் தாமதம். உடனே பறந்துட்டோம். கோவிலுக்கு போறவரைக்கும் ரெண்டுபேரும் எதுவும் பேசல. 

இப்படி ஒரு விஷயம் நடந்ததால, அது வரைக்கும் பெருந்துறை to சென்னிமலை வழிய உபயோகப்படுத்திட்டு இருந்த நாங்க, அன்னைல இருந்து அந்த வழில போறதையே விட்டுட்டோம். ரிடர்ன் வரும்போது வெள்ளோடு வழியில வீடு வந்து சேர்ந்தோம். நாங்க இப்படி ரூட்ட மாத்தினதால தான் அதுக்கு அடுத்த வாரம் நாங்க அந்த விபத்தை சந்திக்க நேர்ந்துச்சு....

(தொடரும்)

Friday, October 7, 2011

ஹாய்... I AM BACK :)

விபத்தில் அடிபட்டிருந்த எனக்கு ஆறுதல் சொன்ன அனைவருக்கும் முதலில் நன்றி...

இரண்டாவது, வடிவேல் விஜயகாந்த் பதிவுக்கு சிலர் தனிமனிதர் தாக்குதல் போல இருப்பதாக பின்னூட்டம் மூலம் வருத்தப்படுகிறார்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார்மூலமாகவோ வந்த குறுஞ்செய்தியாக இருந்தாலும், நான் யோசிக்காமல் பதிவிட்டதற்காக வருத்தப்படுகிறேன். இனியும் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக அந்த பதிவை நீக்கி விடுகிறேன். மன்னியுங்கள் நண்பர்களே..
 

இப்ப விபத்து சம்பந்தப்பட்ட பதிவு.
விஷயம் என்னனா..

நானும் என் தோழியும் (அதாங்க... என்னை கோர்ட்டு படி ஏற வைத்தாளே... அவள்தான்) ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு போவோம். எங்க வீட்ல அப்பா அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்டு. வண்டில போகறதுக்கெல்லாம் விட மாட்டாங்க.  அதனால முதல்ல கொஞ்ச வாரம் ஒழுக்கமா பஸ்ல போயிட்டு பஸ்ல வந்தோம். அப்பறம் பெருந்துறை போய் அங்க இருந்து பிரெண்ட் வண்டிய எடுத்துட்டு சென்னிமலை போயிட்டு, திரும்பி வந்து வண்டியை பெருந்துறைல குடுத்துட்டு அங்கிருந்து பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். இப்படி போயிட்டிருந்த எங்க வாழ்க்கை பயணத்துல....... போலீஸ் என்டர் ஆச்சு.

எப்பவும் போல அந்த வாரம் ஈங்கூர் ரோட்ல வண்டில போயிட்டு இருந்தோமா.... போற வழில அவளோட ஆள் (ன்னு நெனச்சிட்டு இருந்த ஆள் )கிட்ட இருந்து போன் வந்து மிஸ் கால் ஆயிடுச்சு. அம்மணி உடனே ஆளில்லாத ஒரு காட்டுல பஸ் ஸ்டாப் கிட்ட வண்டிய  ஓரம் கட்டிட்டு (ப்ரீயா பேசலாம்னு) கால் பண்ணினா. சார் அங்க யார்கிட்டயோ பிசியா பேசிட்டு இருந்தாப்ல. 'இருடி இருடி பேசிட்டு போலாம்'னு கெஞ்சி கேட்டா. நானும் இரக்க மனசுகாரி ஆச்சா.... சரின்னு சொல்லிட்டேன். ரெண்டு பேரும் வரக்காட்டுல வெயிட் பண்ணினோம்.

சுத்தியும் ஒரு கடைகண்ணி, வீடு வாசல் ஒன்னும் இல்ல. எங்களுக்கு எதிர்த்தாப்படி ஒரு பதினொன்னாவது பன்னண்டாவது படிக்கற பையன் மட்டும் ஒரு பைக்ல உக்காந்து மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்தான். அட நீயுமாடான்னு மனசுல நெனச்சுகிட்டு, நாங்க பாட்டுக்கு பேசிட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துல ஒரு பையன் வந்து அந்த பையன் கூட பேசிட்டு இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு பையனும் வந்துட்டான். கொஞ்சம் சந்தேகமா இருந்துது. இவள வாடின்னு கூப்பிட்டா, போலாம் போலாம்னு சொல்றாளே தவிர எந்திரிக்க மாட்டேங்கறா. கண்ட கதையும் அடிச்சுட்டு இருந்தவ, திடீர்னு 'போலாம் வா... போலீஸ் வண்டி வருது'ன்னு சொல்லி எந்திரிச்சா. எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு.

நாங்க கிளம்பறதுக்குள்ள, வண்டி பக்கத்துல வந்து அந்த பசங்க கிட்ட நின்னு போலிஸ்காரங்க விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு கான்ஸ்டபிள் எங்ககிட்ட வந்து விசாரிச்சாரு. கோர்ட்டு கட்டடத்த கண்டே நான் எவ்ளோ நடுங்கினேன்னு உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட நான்  போலிஸ பார்த்து எவ்ளோ நடுங்கி இருப்பேன்... அம்மணி வக்கீல் ஆச்சா... கான்ஸ் கிட்ட கெத்து காட்டினா. கான்ஸ் எல்லாம் கேட்டுட்டு சரிங்க இன்ஸ்பெக்டர் ஐயா கிட்ட ஒரு வார்த்த சொல்லிடுங்கன்னு சொன்னாரு. நான் freeze ஆகி அப்படியே நிக்கறேன்.

இங்க கெத்தா பேசினவ, அங்க போய் இன்ஸ்பெக்டர் கிட்ட பம்பி பம்பி பேச ஆரம்பிச்சுட்டா. நான் ரோட கூட க்ராஸ் பண்ணாம திரு திருன்னு முழிச்சுகிட்டு  நிக்கறேன்... அவரும் இவளை கிராஸ் செக் பண்ணிகிட்டே என் பக்கம் திரும்பி 'அந்த பொண்ணு யாரு' ன்னாரு.

(இங்க வெக்கறேன் தொடரும் கார்டு )
 Funny "To Be Continued" Fitted T-Shirt