Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, December 18, 2011

ஈரோடு சங்கமம் 2011 - நடந்தது என்ன ?


ஆஹா... ஈரோடு சங்கமம் பத்தி நான் தான் சுடச்சுட முதல் பதிவு தர போறேனா? Good na....

Alright! திங்கள் கிழமையோ செவ்வாய் கிழமையோ சங்கவி போன் பண்ணி இருந்தார். 'ஈரோட்டில் சங்கமம் நடக்க போகுது. நீங்க கண்டிப்பா வர்றீங்க. போன வருஷமும் வரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல. இந்த முறை கண்டிப்பா வாங்க. நிறைய பெண் பதிவர்களும் வர்றாங்க'ன்னு சொன்னார். போன வருஷமே சங்கவி எழுதுன பதிவுல எல்லார் வாயிலும் ஜொள்ளு வடியற அளவு, உணவு ஏற்பாடு பத்தி எழுதி இருந்தாரா... எங்க இந்த தடவை மிஸ் ஆயிடுமோன்னு வேற ஒரு எண்ணம். நாமளும் இந்த வருஷம் கொஞ்சம் வளந்துட்டோமா... (அட உயரத்துலப்பா...) அதனால கண்டிப்பா வரேன்னு துண்டு போட்டுட்டேன்.

எப்படா ஞாயித்து கிழமை வரும்...எல்லாரையும் பார்க்கலாம்னு நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். ஞாயித்து கிழமை காலை சங்கவிக்கு 'எப்ப வரட்டும்? ஆரம்பிச்சுட்டாங்களான்னு'  போன் பண்ணினேன்.  9.30 க்கு வந்துடுங்கன்னு சொன்னார். நம்ம நாட்டோட தேசிய வியாதியே லேட்டா வர்றது தான? அதனால மேடம் (நாந்தான்) கரெக்டா பத்து மணிக்கு போயிட்டேன். போனதும் நம்ம பேரு , ப்ளாக் அட்ரஸ் எல்லாம் எழுத சொல்லி உள்ள அனுப்பினாங்க. ஏசி ஹால்ல நிறைய பேர் உக்கார்ந்திருந்தாங்க. ஒரு குறும்படம் காமிச்சாங்க. நான் படம் முடியும் நேரத்துல போனதால அதை பத்தி எழுத முடியல.

மணி பத்தரை ஆச்சு. ஈரோடு கதிர், மகேஸ்வரன், பொதிகை செய்தி வாசிப்பாளர் அருள்மொழி மூணு பேரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிச்சாங்க. மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தான் chief  guest . தலைவர் தாமோதர் சந்துரு அருமையா நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அப்பறம் பெரிய தலைகளா பார்த்து ஒரு 15 பேருக்கு விருது வழங்கினாங்க. எழுத்துல பார்த்தவங்களை நேர்ல பார்க்கறது வித்யாசமா இருந்துது. அட இவங்களா அவங்க, அவங்களா இவங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.  சிலபேரை அங்க தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி அறிமுகம் இல்லை. இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள்.

விருது வழங்கினதும், ஸ்டாலின் சாரின் உரை. விருது பெற்றவர்களின் ஏற்புரை. பாலாசியின் நன்றியுரை. அப்பறம் எல்லா ப்ளாகர்சும் உங்களை அறிமுகப்படுத்திக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அப்பவே கால்வாசி கூட்டம் கிளம்பி வெளில போய்டுச்சு. அப்பறம் ஒவ்வொருத்தரா இன்ட்ரோ குடுத்துட்டு அவங்கவங்க பிரெண்ட்ஸ கூட்டிட்டு வெளில போய்ட்டாங்க. அப்ப பாதி கூட்டம் வெளில போய்டுச்சு.

போச்சுடா... நாம இன்ட்ரோ பண்ணிக்கறதுக்குள்ள
மீதி கூட்டமும் போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு போய் நானும் பண்ணிக்கிட்டேன். நல்ல வேளை.... நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க. (எவ்ளோ பேர்னு கேக்காதீங்க. இருந்த கால்வாசி கூட்டத்துல  கணிசமான பேர்) அதுலயும் அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் சாரும், கோகுலத்தில் சூரியன் வெங்கட் சாரும் கான்பிடன்டா சொன்னதுக்கு அவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அதுக்கப்பறம் லஞ்ச். இது குறித்த detail தகவலுக்கு சங்கவியோட பதிவு நாளைக்கு வரும். சுருக்கமா, மட்டன், சிக்கன், தலைக்கறி, முட்டை பணியாரம், எலும்பு குழம்பு, பருப்பு பாயாசம். சாப்டுட்டு வெத்தலை பாக்கு போட்டுட்டு வந்தாச்ச்ச்ச்ச்ச்.....

 வேற யாராவது பதிவு போட்ருப்பாங்க. படிக்கலாம்னு பார்த்தேன். யாரும் போடல. நம்மள மாதிரி நீங்களும் என்ன ஆச்சுன்னு எதிர்பார்த்திட்டு இருப்பீங்களேன்னு நானே பதிவை போட்டுட்டேன். போட்டோஸ் எங்கன்னு தான கேக்கறீங்க? சி.பி சார் ஒரே பதிவுல 600 போட்டோ போடறேன்னு சொல்லி இருக்கார். அவரோடதுல பார்த்துக்கங்க..

 

Thursday, November 24, 2011

இழவு வீடு - கவிதை


இழவு வீடு

ஒவ்வொரு
இழவு வீடும்
பெருங்குரலோடுதான்
துக்கத்தை வெளிப்படுத்த
ஆரம்பிக்கின்றன.

பெண்கள்
ஒப்பாரி வைக்க
ஆண்கள்
அழுகையை அடக்கிக்கொண்டு
வெளியில் போய்
நிற்கிறார்கள்

நாட்டமை போலும்
ஒரு உறவினர்
தொலைபேசி மூலம்
தொலைதூர சொந்தங்களுக்கு
செய்தி தருகிறார்

அக்கம்பக்கம்
முதலில் வந்து
துக்கம் விசாரிக்க
மெதுவாய் கூடுகிறது
கூட்டம்

இறந்தவரை
நடுவீட்டில் வைத்து
மாலையிட்டு மரியாதை செய்து
சுற்றிலும் அமர்ந்து
ஒப்பாரி வைத்து
புகழ் பாடத்
தொடங்குகிறார்கள்

சுமார் ஒரு மணி நேரம்
கழிந்தபின்
அக்கம்பக்கம்
அகலுகிறது
சொந்த பந்தம்
நெருங்குகிறது
பெருங்குரல் அழுகை
கேவலாகிறது

மகள், மருமகளின்
கண்கள் மெதுவாக
அடுத்தவர் முகம் பார்க்க ஆரம்பிக்கிறது
வாய் மெதுவாக
இறந்தவர் எப்படி இறந்தார் என
காரணம் சொல்ல ஆரம்பிக்கிறது
தன்னால் கவனித்துக்கொள்ள இயலாத
குற்ற உணர்வை மனம் ஒத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது

இன்னும் சிறிது நேரமாகிறது
அழுதுகொண்டு வருபவர்களுடன் மட்டும்
அழுதுகொண்டு...
மற்றபடி
மௌனம் காத்துக்கொண்டு....

இன்னும் கொஞ்ச நேரம் கழிகிறது
தெரிந்தவர்கள் வர ஆரம்பிக்கின்றனர்
கண்களும் உடலும்
களைப்புடன் வரவேற்க தொடங்குகிறது
மிக நுண்ணிய புன்னகை
தென்பட தொடங்குகிறது
மெதுவாக நலம் விசாரிப்புகளும்
இடம் பிடிக்கின்றன

மேலும் சில காலம் நகர்கிறது
தத்தம் குடும்பத்தார்
நலன் நாடி
வெளியேயாகினும் சென்று
உணவு உட்கொள்ள
ரகசிய கட்டளைகள் பறக்கின்றன

முதலில் பச்சைத்தண்ணீர் கூட
குடிக்க மறுத்த உதடுகள்
இப்போது காப்பி தண்ணீர்
கொண்டு வர சொல்கின்றன

குடித்தவாறு மெதுவே ஆரம்பிக்கும்
வந்தவர் வராதவர் குறிப்புகள்
இறந்தவர் குடும்ப எதிர்காலம்
இன்னும் ஏதேனும் ரகசியம்
பிணம் எடுக்கும் நேரம்
பின்னே சென்று வழியனுப்புதலும்

அத்தனையும் முடித்து
தத்தம் வீடு சென்று
சுத்தமாக குளித்து
சாவதானமாக கட்டிலில் சாய்ந்து
சொடுக்குவார் டிவி ரிமோட்டை
இன்று நாடகம் என்ன ஆச்சோ தெரியலை என்று
தான் ஆடிவந்த நாடகம் மறந்து...
 
ரொம்ப நாளைக்கு முன்னாடியே எழுதிய கவிதை. (கவிதையா?)  Situation Posting.

Friday, November 18, 2011

ஈரோடு ஆத்மா மின் மயான பாடல் வரிகள்

ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் இறந்தவர்களுக்கு கொள்ளிவைப்பதை ஒரு  கண்ணாடி சுவருக்கு பின்னே மற்ற உறவினர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த சடங்குகள் நடக்கும்போது ஒரு பாட்டு போட்டு விடுகிறார்கள். உண்மையில் மனதை உருக்கும் பாடல் அது. ஒரே முறை தான் ஒலிபரப்பப்படுவதால் அதை பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் பாடல் வரிகளை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

எஸ்.பி.பி. குரலில் லிங்காஷ்டகம் பாடலை கேட்டிருப்பீர்கள். (லிங்கம் லிங்கம் என்றே ஒவ்வொரு வரியும் முடியுமே. அந்த பாடல்..) அந்த டியுனில் இந்த பாடல் மிருதுவான குரலில் (பாம்பே ஜெயஸ்ரீ குரல் போல் உள்ளது) மெதுவாக, குறைந்த பின்னணி இசையுடன் பாடப்பட்டுள்ளது.

இதற்குமுன் அங்கே சென்ற என் நண்பர்கள் இந்த பாடலை பற்றி கூறி இருந்தார்கள். நான் அவர்களிடம் இந்த பாடலை முடிந்தால் பதிவு செய்து வருமாறு சொல்லி இருந்தேன். ஆனால், முதன்முறையாக என் ஆயாவின் இறப்பின்போதுதான் அங்கே சென்றேன்.கேட்டேன். கண்முன்னே இழந்த சொந்தம் எரிந்துகொண்டிருக்கும்போது எங்களை தேற்றுவது போல் அந்த பாடல் இருந்தது. அந்த நிலையில் பாடலை பதிவு செய்ய முடியவில்லை. தோன்றவும் இல்லை. ஆனால் அந்த வரிகள் மாயையின் பக்கத்தை காட்டுவதாக இருந்ததால் வரிகளை மட்டும் படம்பிடித்துக்கொண்டு வந்தேன்.

இதோ அந்த பாடல் வரிகள் :

பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீயுண்டது என்றது  சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுரும்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதுமில்லை
நதிமழை போன்றது விதியென்று கண்டும்
மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதை ஆகும்
 
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதையொன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியை போலொரு மாமருந்தில்லை

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
 
இந்த பாடல் யாருக்காவது ஒலிவடிவமாக கிடைத்தால் எனக்கும் அனுப்புங்களேன்...

Wednesday, November 16, 2011

ப்ச்... அடுத்த இழப்பையும் சந்தித்தாயிற்று...

ப்ச்... அடுத்த இழப்பையும் சந்தித்தாயிற்று...

என் அம்மாவின் அம்மா தன்னுடைய 95 வது வயதில் 8.11.11 அன்று எங்கள் இல்லத்தில் காலமானார்.

ஆறு மகன்கள் இரண்டு மகள்களை பெற்றெடுத்து, பன்னிரண்டு பேரன் பேத்திகளை வளர்த்து, ஆறு கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்திகளை கண்ட எங்கள் பாட்டி எங்களை விட்டு பிரிந்தார்.

பாட்டியை நாங்க ஆயா என்று தான் அழைப்போம். யாராலும் எங்க ஆயாவை வெறுக்க முடியாது. நீங்க வந்து எங்க ஆயா முன்னாடி நின்னா, முதலில் எங்க ஆயா 'நூறாண்டு காலம் வாழ்க. எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும்' என்று முதலில் வாழ்த்தி விட்டுதான் யார் என்ன என்று விசாரிப்பாங்க. நீங்க  கிறிஸ்துவராக இருந்தால் ஸ்தோத்திரம் சொல்லி வாழ்த்துவாங்க. ஹிந்துவாக இருந்தால் முருகன் பெயரில் வாழ்த்துவாங்க.

ஒருவரையும் குறை சொன்னது கிடையாது. கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள முடியாத மாமாக்களை கூட விட்டுகொடுத்து பேசியது கிடையாது. அத்தனை மருமகள்களும் உசத்தி தான்.
பெரிய குடும்பத்தில் பிறந்து, பெரிய குடும்பத்தில் திருமணமாகி வந்து, பன்னிரண்டு குழந்தைகளை பெற்று (4 பேர் குழந்தையிலேயே இறந்துவிட்டார்கள்) அவர்கள் குழந்தைகளையும் வளர்த்து, கூட்டத்திலேயே இருந்த அந்த பெண்மணிக்கு, அனைவரும் தனிக்குடித்தனம் போய்விட்டதில் வருத்தம். ஆயா சகல சௌகரியங்களுடன் இருந்தாலும், தனியாகதான் இருந்தாங்க. தனிமை அவங்கள ரொம்ப உருக்கி இருந்தது.

மகன்களுக்கு தனிதனி குடும்ப பொறுப்புகள் இருப்பதால் அவர்களால் ரெகுலராக வரமுடியாததை, கவனித்துக்கொள்ள முடியாததை ஏற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் ஏங்கிக்கொண்டும் இருந்தார். நான் கூட அவருடைய தனிமையை பொறுத்துக்கொள்ள முடியாமல், "ஆயா, முதியோர் இல்லத்துல போய் இருக்கீங்களா? உங்களுக்கு நல்லா பொழுது போகும். நாங்க வந்து இதே மாதிரி பார்க்கறோம்" என்று சொல்லி இருக்கிறேன். உண்மையில் பார்த்துக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டு அல்ல. அவரது தனிமையை போக்கவே அப்படி சொன்னேன். உடனே ஆயா கோபமாக, " ம்க்கும்... ஆறு பசங்கள வெச்சுகிட்டு நான் போய் முதியோர் இல்லத்துல இருக்கறதா? நல்லா சொன்ன போ..." என்று என்னை தான் திட்டுவாங்க. 

போட்டோ என்றால் அவ்வளவு கொள்ளை பிரியம். போட்டோ எடுக்கலாம் என்றால் உடனே எழுந்து புடவையை நீவி, பார்டர் தெரியுமாறு எடுத்துவிட்டு, தலைமுடிகளை ஒதுக்கி, திருநீறு  இட்டுக்கொண்டு, நீட்டாக அமர்ந்து, போஸ் தருவாங்க. புதுப்புடவை கட்டினால் எதிரே இருக்கும் போட்டோ கடைக்கு கூட்டிட்டு போய் போட்டோ எடுக்கணும். இல்லாட்டி, போட்டோக்ராபர் வீட்டுக்கு வந்து போட்டோ எடுக்கணும். சில சமயம்  'கடை லீவுங்க ஆயா' என்று பொய் சொல்லிவிடுவோம். அந்த சமயங்களில் மொபைலிலோ, டிஜிட்டல் கேமராவிலோ போட்டோ எடுக்க வேண்டும். ஒரு full size, ஒரு Bust size, இருக்கும் ஆட்களுடன் group photo. இது தான் அவங்களோட regular style . தன் இறப்புக்கு கூட போட்டோ வீடியோ எடுக்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். :-(

ஆசையும் இவ்வளவுதான்னு இல்லாம அவ்வளவு ஆசை படுவாங்க. வயசுக்கு ஏத்த மாதிரி ஆசைய குறைச்சுக்குவாங்கன்னு பார்த்தா, சாகற வயசு சாகற வயசுன்னு இன்னும் அனுபவிக்கதான் ஆசைபட்டாங்க. ஆசை குறைஞ்சாதான் மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வரும்னு எல்லாரும் சொல்லியும் அவங்க அதை கடைசிவரை கண்டுக்கவே  இல்ல.

தன் எட்டு குழந்தைகளிலும், என் அம்மாதான் ஆயாவுக்கு எப்பவும் ஸ்பெஷல். பன்னிரண்டு பேரன் பேத்திகளிலும் நான்தான் ஸ்பெஷல். எனக்கு அடிபட்ட போது என்னை பார்க்கவந்த ஆயா, மறுபடியும் தன் பையன்கள் வீட்டுக்கு போகமாட்டேன் என்று உறுதியாக சொல்லி, நான் செத்தால் தான் இந்த வீட்டை விட்டு போவேன் என்று கூறி இருந்தார்கள்.

மகன்கள் வந்து 'நம்ம வீட்டுக்கு போலாம் வாங்க. ஆட்டோ நிக்குது ' என்று விளையாட்டாக கூப்பிடும்போது, கண்ணை மூடிக்கொண்டு 'பலவீனமா இருக்கு. ஆட்டோ ஏறமுடியாது. இங்கயே இருக்கேன்' என்று நடிப்பதை பார்த்து வாய் விட்டு சிரித்திருக்கிறோம்.

பகலில் எல்லாம் எங்க சோபால தான் படுத்திருப்பாங்க. நான் தலைவலின்னு சொன்னபோது, என்னை மடியில் படுக்க வைத்து தலையை மிருதுவாக பிடித்து விட்டது அவ்வளவு ஆறுதல்.... இனி எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போவதே இல்லை....

ஒவ்வொரு முறை டீ, காபி குடிக்கும்போதும், ஒவ்வொருமுறை உணவருந்தும்போதும், நான் சாப்பிட்டேனா என்று கேட்காமல் சாப்பிட்டதே இல்லை. நான் லேட்டாக சாப்பிடும் ஆள் என்பதால், நான் சாப்பிடும்போது என்னுடன் சேர்ந்து மறுபடியும் கொஞ்சமாவது சாப்பிடுவாங்க. இளநீர், கால் சூப் ரெண்டும் எங்க ஆயாவுக்கு பூஸ்ட் மாதிரி. பேருக்கு குடித்துவிட்டு, எனக்கு கொடுக்க சொல்லிடுவாங்க.

கடைசி இந்த இரண்டு மாதங்கள் என் அம்மா எங்கள் வீட்டிலேயே ஆயாவை வெச்சு பார்த்துக்கிட்டாங்க. கடந்த 31 ம் தேதியிலிருந்து ஆயா சரியா சாப்பிடாம ரொம்ப பலவீனமானதால், அம்மா மாமாவை வர சொல்லி, ஹாஸ்பிடல்ல சேத்திட்டாங்க. டாக்டர்  viral infection  ன்னு சொல்லி நாலு நாள் treatment குடுத்திட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க.

எங்க ஆயா இது மாதிரி பல முறை சீரியஸ் கண்டிஷன்ல இருந்திருந்ததால், இந்த முறை யாரும் அவ்வளவாக நெகடிவா நினைக்கலை. ஆயா எப்படியும் பிழைச்சிடுவாங்கன்னு   தான் இருந்தோம். ஆனா, 8 ம் தேதி விடியற்காலை 2.30 மணியளவில் இறந்துட்டாங்க.

இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும்போது, நான் உண்மையில் சாதாரண மனநிலையில் தான் இருந்தேன். ஆயா என்னை எவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்று அவரை பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் எழுதும்போது தான் தெரிகிறது. உண்மையில் எனக்கு இப்போது குற்ற உணர்வே மேலெழுகிறது. அவர் என்னை நேசித்த அளவு நான் அவரை நேசித்திருக்கவில்லை. இப்போது என் கண்களில் இருந்து வழியும் நீர்த்துளிகளை அவரின் நேசிப்புக்கு அர்ப்பணிக்கிறேன்.

இவங்க இறந்த நாளில் தான் பலவருடங்களாக பார்க்காமல் இருந்த சொந்த சித்தப்பா பெரியப்பா பசங்களை ஒருத்தருக்கொருத்தர் சந்தித்துக்கொண்டார்கள். (நானும் சிலரும்  எல்லோருடனும் எப்போதும் தொடர்பில் தான் இருக்கிறோம்). பல வருடங்களுக்கு முன் சண்டை போட்டிருந்த மாமாக்கள், அத்தைகள் எல்லோரும் ஆயாவின் இறப்பில் ஒன்று சேர்ந்து ஆயாவை வழியனுப்பி வைத்தார்கள். எல்லோரும் சேர்ந்து பழைய கதைகள் பேசிக்கொண்டிருந்தபோது, எப்பேர்பட்ட கூட்டுக்குடும்ப வாழ்கையை மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று எல்லோரும் உணர்ந்தோம். அதனால் இனி வருடம் ஒருமுறை ஒரு கெட் டு கெதர் ஏற்பாடு செய்து, எல்லோரும் கண்டிப்பாக கலந்துகொள்ள முடிவெடுத்து உள்ளோம்.

எங்க ஆயா விரும்பியது அதுதான்.... "என் மக்கள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும்"

Thursday, October 20, 2011

விபத்து... நடந்தது என்ன? (I am Back - மூன்றாம் பாகம்)

போன பதிவின் தொடர்ச்சி என்பதால் அந்த பதிவை இங்க கிளிக் பண்ணி படிச்சுட்டு இங்க வாங்க நண்பர்களே ..

வழக்கம்போல செவ்வாய்கிழமை வந்தது. என் தோழி 'பெருந்துறைல இருக்கற அந்த பொண்ணு  ஊருக்கு போய்ட்டதால, இந்த முறை அங்க வண்டி கிடைக்காது. அதனால எப்பவும் போல இல்லாம  இன்னைக்கு நாம நம்ம வீட்ல இருந்தே என் வண்டில போலாம். பெருந்துறை வழியா சுத்திட்டு போக வேணாம். போன முறை போலிஸ் கிட்ட மாட்டினது வேற சங்கடமா இருக்கு. அதனால வெள்ளோடு வழியா போலாம்'ன்னு சொன்னா. நானும் சரின்னு சொல்லிட்டேன். 

முருகனுக்கு விளக்கு போட வழக்கமா விளக்கு வாங்கற கடைல விளக்கு வாங்கிட்டு அவ திரும்பும்போது பால் பாக்கெட் வச்சிருக்கற டப்பால கால் தடுக்கி தாய்மண்ணை முத்தமிட போனா. தடுத்து புடிச்சு, 'என்னடி தடுக்குது. அடுத்த வாரம் போய்க்கலாமா?'ன்னு கேட்டேன். 'அட இதுக்கெல்லாம் பயந்துகிட்டு. வா. போலாம்'ன்னா. 

சரின்னு நானும் பேசாம வண்டில உக்காந்துகிட்டேன். அடுத்து அம்மணி கோர்ட்ல ஏதோ வேலைன்னு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனா. நான் உள்ள வரலைன்னு சொல்லி வெளிலே வெயிட் பண்ணிட்டிருந்தேன். திரும்பி வந்து வண்டிய ஸ்டார்ட் பண்ண போகும்போது அவளோட கொலுசு கட் ஆகி நழுவி விழுந்துச்சு. 'ஏய், ரெண்டாவது சகுனமும் முருகன் காமிச்சுட்டாண்டி. வீட்டுக்கு போலாம்'ன்னு நான் சொன்னேன். அதுக்கு அவ, 'மூணாவது சகுனமும் காமிச்சுட்டா உன்ன அங்கேயே பஸ் ஏத்தி வீட்டுக்கு அனுப்பிடறேன். போதுமா'ன்னு சொன்னா. சரின்னு அரை மனசோட வண்டில உக்காந்தேன்.
வண்டி நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. இது புது வழிங்கறதால, சென்னிமலை போறதுக்குள்ள ரெண்டு மூணு முறை வழி தவறி திரும்பி திரும்பி சரியான வழி கேட்டு  போனோம். போக போக, அவ 'ஆமா, எப்ப பார்த்தாலும் நானே வண்டி ஓட்டிகிட்டு இருக்கேனே, நான் என்ன உனக்கு டிரைவரா? திரும்பி வரும்போது நீதான் ஓட்டனும்'ன்னு திட்டிகிட்டே வந்தா. 

actually , எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. அதனால எங்க அப்பா என்மேல care பண்றேன் பேர்வழின்னு, என்னை பொத்தி பொத்தி தான் வளர்ப்பார். (அதனால நல்லது நடந்ததை விட கெட்டது நடந்தது தான் ஜாஸ்திங்கறது வேற விஷயம்). இப்படிப்பட்ட அப்பாவ மீறி  நான் இப்ப தான் வண்டி வாங்கி கொஞ்ச நாளா தான் ஓட்டிகிட்டு இருக்கேன். டபுள்ஸ் வைக்கறதுன்னா 'நான் வண்டி ஓட்ட பழகிட்டு இருக்கேங்கற விஷயம்' யாருக்கு தெரியாதோ அவங்கள வெச்சுதான் ஓட்டுவேன். இந்த விஷயமெல்லாம் இவளுக்கும் தெரியும். தெரிஞ்சும் இந்த முறை கண்டிப்பா வண்டி ஓட்டியே தீரணும்னு கட்டளையே போட்டுட்டா. 

சென்னிமலை போனோம். முருகனை தரிசிச்சோம். திரும்பி வரும்போது, மலைல இருந்தே ஓட்ட சொன்னா. உனக்கு உயிர் மேல பயம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் எப்படி ஓட்டுவேன்னு எனக்கு தெரியும்.  ஊருக்கு வெளில வந்தபிறகு வேணா நான் ஓட்டறேன்'ன்னு சொல்லிட்டேன். ரெண்டுபேரும் மலைல இருந்து இறங்கி, பேக்கரில பப்ஸ் சாப்ட்டுட்டு, போற வழில பசிச்சா சாப்பிட முறுக்கு பாக்கெட் வாங்கி வண்டில போட்டுட்டு வண்டிய கிளப்பினோம். வண்டி சிட்டி லிமிட்ட தாண்டி வெள்ளோடு பிரிவுல திரும்பினதும், வண்டிய நிறுத்தி என்கிட்டே குடுத்தா. 

அவ குண்டு பக்கடி. நான் ஒல்லி பிச்சான். நான் டிரைவர் சீட்ல உக்காந்ததும், இவ உக்கார போனா. நான் வண்டிய கீழ போட போனேன்... (முருகன் மூணாவது சகுனம் காட்டினது எங்களுக்கு தெரியாம போய்டுச்சு). கெக்கேபெக்கேன்னு  சிரிச்சுகிட்டு மறுபடியும் பேலன்ஸ் பண்ணி வண்டி எடுத்து ஓட்ட ஆரம்பிச்சோம். இத்தனைக்கும் ஸ்பீடாமீட்டர் 25 தாங்க காமிச்சுச்சு. ரொம்ப ஸ்பீடாவெல்லாம்  போகலைங்க.

ஒரு ரெண்டு கிலோமீட்டர் தான் போய் இருப்போம். அசோகபுரம்னு ஒரு ஏரியா வந்துச்சு. ரோடு அகலம் கொஞ்சம் குறைவு. ஒரு வளைவு வேற. ஒரு அம்மா தண்ணி எடுத்துட்டு வந்துட்டு இருந்தாங்க. அவங்க கூட ஒரு அஞ்சு ஆறு வயசுல ஒரு சின்ன பொண்ணு. அந்த பொண்ணு அவங்க அம்மா கைய உதறிட்டு ரோட கிராஸ் பண்ண பார்த்துச்சு. நான் ஹார்ன் அடிக்கறேன். வந்துடாதன்னு தலைய வேற ஆட்றேன். அது எங்கள பார்த்து சிரிச்சுகிட்டே குடுகுடுன்னு ரோட கிராஸ் பண்ண வந்துடுச்சு. என் பிரெண்டு கத்தறா. நான் ப்ரேக் போட்டா, என் பிரெண்டு கண்டிப்பா விழுந்துடுவா. பக்கமா போய்ட்டதால அந்த குட்டி பொண்ணு கண்டிப்பா நின்னுடும். நாம நிறுத்தவேணாம்ன்னு நினைச்சு ப்ரேக் போடலாமா வேணாமா ன்னு யோசிச்சு கிட்டே வண்டிய ஓட்டறேன் (இந்த இடத்துல திட்டாதீங்க ப்ளீஸ்). 

இந்த நேரத்துல, ஒண்ணா அந்த பொண்ணு கிராஸ் பண்ணி இருக்கணும். இல்லாட்டி அப்படியே நின்னிருக்கணும். வண்டி பக்கத்துல வந்ததும், அந்த பொண்ணு தேவை இல்லாம  ஒரு செகண்ட் நின்னு, கரெக்டா வண்டில இடிக்கற நிலைலேயே வந்துட்டா. நான் ப்ரேக்கையும் பிடிச்சுட்டேன். ஆனா, நான் அவசரத்துல புடிச்சது பிரன்ட் ப்ரேக். சடார்ன்னு ஒரு சவுண்ட். 'ஆ.... அம்மா........' ன்னு அந்த பொண்ணோட அலறல். நானும் என் ப்ரெண்டும் கத்தினமான்னு ஞாபகம் இல்ல. 

அடுத்த செகண்ட் அந்த பொண்ணு அந்த இடத்துலயும், என் பிரெண்ட் ரெண்டு பல்டி அடிச்சு புல்வெளி பக்கமாவும், நான் ஒரு அரை நிமிஷத்துக்கு சறுக்கிகிட்டே ரோட்டு பக்கமாவும் விழுந்தோம். (அந்த அரைநிமிஷம் 'போச்சுடா. நாம கொலை கேசுல மாட்டிகிட்டோம்'ன்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். கூடவே அந்த ரணகளத்துலயும்  தலைல அடிபட்டுட கூடாதுன்னு தலைய தூக்கிகிட்டேன்)  வண்டி என் கால்ல விழுந்து என்னால எந்திரிக்க முடில. என் பிரெண்டு அந்த பொண்ண 'அறிவு இருக்கா அப்படியா இப்படியா'ன்னு திட்டிகிட்டு இருக்கா. அங்க இருந்த கொஞ்சநஞ்ச பேர் உடனடியா திரண்டு எங்களை எல்லாம் தூக்கிட்டாங்க. அந்த சின்ன பொண்ணுக்கு நல்ல வேளை ஒண்ணும் ஆகல. தலைல வலி மட்டும்தான்னு சொல்லுச்சு. அப்ப ஒரு மகராசன் சொன்னாரு , " இந்த பொண்ணுங்க மேல தப்பு இல்ல. அந்த சின்ன பொண்ணுதான் திடீர்னு கிராஸ் பண்ணிடுச்சு"ன்னு . எனக்கு அப்பாடான்னு ஆகி போச்சு. அப்படின்னா கொலைகேசுல இருந்து தப்பிச்சுட்டோம்னு திருப்தி வந்துச்சு.

ஆனா,  இதைவிட பெரிய பிரச்சனைய சந்திக்க போறோம்ன்னு அப்ப எனக்கு தெரியல.அவ வீட்லயாவது பரவாயில்ல. வண்டில போறோம்ன்னு தெரியும். நாங்க வண்டில போறோம்ன்னு எங்க வீட்ல சொல்லாம தான வந்திருக்கோம்.  ரத்த சகதியா நிக்கற நான், ஸ்ட்ரிக்டா இருக்கற எங்க அப்பாகிட்ட எப்படி சொல்லுவேன்? என் முகத்தில் மெதுவாக பீதியின் நிழல் படர்ந்தது.

(அடுத்த பதிவில் முடிக்க முயற்சி செய்கிறேன். தொடரும்)
ஒரு  டவுட்: இன்ட்லி வோட்டு பட்டன் ஏன் work ஆவதில்லை?

Tuesday, October 18, 2011

I am Back - இரண்டாம் பாகம்

இதற்கு முந்தைய பதிவை படிக்க இங்கே செல்லவும்

அந்த இன்ஸ்பெக்டர் 'இந்த பொண்ணு யாரு?'ன்னு கேள்வி கேக்கவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. என் தோழியோ 'இவ யாருன்னே தெரியாது'ங்கற ரேஞ்சுக்கு முழிக்க ஆரம்பிச்சுட்டா. அப்பறம் சுதாரிச்சுகிட்டு 'என் பிரெண்டுங்க சார்' ன்னு சொன்னா. அவர் விடுவேனான்னு 'என்ன பண்ணிட்டு இருக்காங்க?' ன்னு கேட்டார். நான் நாய் வாய் வெச்ச மாதிரி பல வேலைகள் செய்றதால இவளுக்கு எதை சொல்லறதுன்னு யோசனையா இருந்துச்சு. ஆளாளுக்கு மாத்தி சொல்லிட்டா மாட்டிக்குவோமேன்னு வேற ரெண்டு பேருக்கும் பயம். அப்பறம் நான் 'ஸ்போக்கன் இங்கிலீஷ் டீச்சர்னு சொல்லு'ன்னு மெதுவா சொல்லவும், அவளும் அதை சொன்னா. (actually நான் ஒரு ஸ்டுடன்ட் மாதிரி தான் இருப்பேன்ங்கறது வேற விஷயம்).    'டீச்சர்' அப்படிங்கற வார்த்தைக்கு இன்னும் மரியாதை இருக்குன்னு அன்னைக்கு நான் தெரிஞ்சுகிட்டேன். 

அதுக்கப்பறம் அவர் கொஞ்சம் தன்மையா வார்ன் பண்ணினார். 'ஏம்மா, ரெண்டு பேரும் படிச்சிருக்கீங்க. நீங்களே கொஞ்சம் கூட awareness  இல்லாம நடுக்காட்டுல இப்படி நிக்கறீங்களே... அப்பறம் படிக்காதவங்க எப்படி நடந்துக்குவாங்க? இந்த பசங்கள சின்ன பசங்கன்னு நீங்க நினைக்கறீங்க. ஆனா இவனுங்க வெச்சிருக்கற இந்த வண்டி, போன் எதுவும் இவங்களோடது இல்ல தெரியுமா? நேத்து நைட் இதே ரோட்ல chain snatching  நடந்திருக்கு. அதுக்குதான் நாங்க patrol வந்துட்டு இருக்கோம். இப்படி எல்லாம் நிக்காதீங்க. கிளம்புங்க'ன்னு சொன்னது தான் தாமதம். உடனே பறந்துட்டோம். கோவிலுக்கு போறவரைக்கும் ரெண்டுபேரும் எதுவும் பேசல. 

இப்படி ஒரு விஷயம் நடந்ததால, அது வரைக்கும் பெருந்துறை to சென்னிமலை வழிய உபயோகப்படுத்திட்டு இருந்த நாங்க, அன்னைல இருந்து அந்த வழில போறதையே விட்டுட்டோம். ரிடர்ன் வரும்போது வெள்ளோடு வழியில வீடு வந்து சேர்ந்தோம். நாங்க இப்படி ரூட்ட மாத்தினதால தான் அதுக்கு அடுத்த வாரம் நாங்க அந்த விபத்தை சந்திக்க நேர்ந்துச்சு....

(தொடரும்)

Friday, October 7, 2011

ஹாய்... I AM BACK :)

விபத்தில் அடிபட்டிருந்த எனக்கு ஆறுதல் சொன்ன அனைவருக்கும் முதலில் நன்றி...

இரண்டாவது, வடிவேல் விஜயகாந்த் பதிவுக்கு சிலர் தனிமனிதர் தாக்குதல் போல இருப்பதாக பின்னூட்டம் மூலம் வருத்தப்படுகிறார்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார்மூலமாகவோ வந்த குறுஞ்செய்தியாக இருந்தாலும், நான் யோசிக்காமல் பதிவிட்டதற்காக வருத்தப்படுகிறேன். இனியும் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக அந்த பதிவை நீக்கி விடுகிறேன். மன்னியுங்கள் நண்பர்களே..
 

இப்ப விபத்து சம்பந்தப்பட்ட பதிவு.
விஷயம் என்னனா..

நானும் என் தோழியும் (அதாங்க... என்னை கோர்ட்டு படி ஏற வைத்தாளே... அவள்தான்) ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு போவோம். எங்க வீட்ல அப்பா அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்டு. வண்டில போகறதுக்கெல்லாம் விட மாட்டாங்க.  அதனால முதல்ல கொஞ்ச வாரம் ஒழுக்கமா பஸ்ல போயிட்டு பஸ்ல வந்தோம். அப்பறம் பெருந்துறை போய் அங்க இருந்து பிரெண்ட் வண்டிய எடுத்துட்டு சென்னிமலை போயிட்டு, திரும்பி வந்து வண்டியை பெருந்துறைல குடுத்துட்டு அங்கிருந்து பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். இப்படி போயிட்டிருந்த எங்க வாழ்க்கை பயணத்துல....... போலீஸ் என்டர் ஆச்சு.

எப்பவும் போல அந்த வாரம் ஈங்கூர் ரோட்ல வண்டில போயிட்டு இருந்தோமா.... போற வழில அவளோட ஆள் (ன்னு நெனச்சிட்டு இருந்த ஆள் )கிட்ட இருந்து போன் வந்து மிஸ் கால் ஆயிடுச்சு. அம்மணி உடனே ஆளில்லாத ஒரு காட்டுல பஸ் ஸ்டாப் கிட்ட வண்டிய  ஓரம் கட்டிட்டு (ப்ரீயா பேசலாம்னு) கால் பண்ணினா. சார் அங்க யார்கிட்டயோ பிசியா பேசிட்டு இருந்தாப்ல. 'இருடி இருடி பேசிட்டு போலாம்'னு கெஞ்சி கேட்டா. நானும் இரக்க மனசுகாரி ஆச்சா.... சரின்னு சொல்லிட்டேன். ரெண்டு பேரும் வரக்காட்டுல வெயிட் பண்ணினோம்.

சுத்தியும் ஒரு கடைகண்ணி, வீடு வாசல் ஒன்னும் இல்ல. எங்களுக்கு எதிர்த்தாப்படி ஒரு பதினொன்னாவது பன்னண்டாவது படிக்கற பையன் மட்டும் ஒரு பைக்ல உக்காந்து மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்தான். அட நீயுமாடான்னு மனசுல நெனச்சுகிட்டு, நாங்க பாட்டுக்கு பேசிட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துல ஒரு பையன் வந்து அந்த பையன் கூட பேசிட்டு இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு பையனும் வந்துட்டான். கொஞ்சம் சந்தேகமா இருந்துது. இவள வாடின்னு கூப்பிட்டா, போலாம் போலாம்னு சொல்றாளே தவிர எந்திரிக்க மாட்டேங்கறா. கண்ட கதையும் அடிச்சுட்டு இருந்தவ, திடீர்னு 'போலாம் வா... போலீஸ் வண்டி வருது'ன்னு சொல்லி எந்திரிச்சா. எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு.

நாங்க கிளம்பறதுக்குள்ள, வண்டி பக்கத்துல வந்து அந்த பசங்க கிட்ட நின்னு போலிஸ்காரங்க விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு கான்ஸ்டபிள் எங்ககிட்ட வந்து விசாரிச்சாரு. கோர்ட்டு கட்டடத்த கண்டே நான் எவ்ளோ நடுங்கினேன்னு உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட நான்  போலிஸ பார்த்து எவ்ளோ நடுங்கி இருப்பேன்... அம்மணி வக்கீல் ஆச்சா... கான்ஸ் கிட்ட கெத்து காட்டினா. கான்ஸ் எல்லாம் கேட்டுட்டு சரிங்க இன்ஸ்பெக்டர் ஐயா கிட்ட ஒரு வார்த்த சொல்லிடுங்கன்னு சொன்னாரு. நான் freeze ஆகி அப்படியே நிக்கறேன்.

இங்க கெத்தா பேசினவ, அங்க போய் இன்ஸ்பெக்டர் கிட்ட பம்பி பம்பி பேச ஆரம்பிச்சுட்டா. நான் ரோட கூட க்ராஸ் பண்ணாம திரு திருன்னு முழிச்சுகிட்டு  நிக்கறேன்... அவரும் இவளை கிராஸ் செக் பண்ணிகிட்டே என் பக்கம் திரும்பி 'அந்த பொண்ணு யாரு' ன்னாரு.

(இங்க வெக்கறேன் தொடரும் கார்டு )
 Funny "To Be Continued" Fitted T-Shirt

Monday, September 19, 2011

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!

விபத்தில் சிக்கி விட்டேன். ப்ளாக் பக்கம் வர கொஞ்சம் நாளாகும் நண்பர்களே...

 

Thursday, September 1, 2011

கதை சொல்லட்டுமா?

ஒருநாள் வானத்துல இருக்கற சூரியன்ல இருந்து ஒரு துளி பூமில விழுந்துச்சாம். அப்படி விழுந்த துளி ஒரு சின்ன பூவா மாறிடுச்சாம். அதை பார்த்த ஒரு கிழவி, அந்த பூவை தொட்டு ஒரு பாட்டு பாடினாளாம். உடனே அந்த பூ அந்த கிழவியோட இளமைய திரும்ப தந்து அவள ஒரு யுவதி ஆக்கிடுச்சாம். அசந்து போன கிழவி, 'ஓஹோ,,, இந்த பூ இவ்ளோ சக்தி வாய்ந்ததா'ன்னு அந்த பூவ பத்திரமா யாருக்கும் தெரியாம ஒளிச்சு வெச்சு பாதுகாத்து வந்தாளாம். எப்ப எப்ப இளமை போகுதோ அப்ப அப்ப அந்த பூவை தொட்டு பாட்டு பாடி தன் இளமைய தக்க வெச்சுகிட்டாளாம்.

அந்த ஊர் ராஜாவோட மனைவி (ராணி) கர்ப்பமா இருந்தாளாம். அவளுக்கு குழந்தை பொறக்க போற நேரத்துல திடீர்னு உடம்பு சரி இல்லாம போய், சாகற நிலைமைக்கு போய்ட்டாளாம். அப்ப அந்த மந்திரபூவை தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்தா, ராணிய பொழைக்க வைக்கலாம்னு அரண்மனை டாக்டர் சொல்லிட்டாராம். உடனே, ராஜாவோட ஆளுங்க, எங்கடா அந்த மந்திரப்பூ ன்னு தேடி அலைஞ்சாங்களாம்.

ஒருநாள் அந்த கிழவி அந்த பூவுக்கு பாட்டு பாடிட்டு இருக்கும்போது காவலாளிகள் வந்துட்டாங்களாம். உடனே அந்த கிழவி வேகமா ஓடி ஒளிஞ்சுகிட்டாளாம். ஆனா, ஒளிஞ்சுக்கற அவசரத்துல, பூவை மறச்சு வெச்சிருந்த கூடையை தட்டி விட்டுட்டாளாம். இருட்டுல ஒளிர்ந்த அந்த பூவை காவலாளிகள் பார்த்துட்டு அரண்மனைக்கு எடுத்துட்டு போய்ட்டாங்களாம். 

எடுத்துட்டு போய் ராஜாட்ட குடுக்க, ராஜா அதை டாக்டர்ட்ட குடுக்க, அவர் அதை தண்ணில போட்டு மருந்தாக்கி ராணிய குடிக்க வெச்சாராம். அதுக்கப்பறம், ராணிக்கு உடம்பு சரியாகிடுச்சாம். அப்பறம் ராஜா ராணிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பொறந்ததாம். அந்த குழந்தைக்கு கோல்டன் கலர்ல முடி இருந்துச்சாம். குழந்தை பொறந்த சந்தோஷத்த கொண்டாட, ராணியும் ராஜாவும் குழந்தைக்காக ஒரு பறக்கற விளக்கு தயார் செஞ்சு பறக்க விட்டாங்களாம். மக்கள் எல்லோரும் சந்தோஷமா இருந்தங்களாம். 

அன்னைக்கு நைட்டு, எல்லாரும் தூங்கிட்டு இருந்தப்ப, அந்த கிழவி வந்து குழந்தைகிட்ட போய் எப்பவும் பாடற பாட்டை பாடினாளாம். உடனே குழந்தையோட முடி லைட் போட்டது போல தக தகன்னு மின்னுச்சாம். அந்த முடியை கிழவி தடவி கொடுத்ததும் இளமை திரும்ப வந்துடுச்சாம். அதனால கொஞ்சூண்டு முடிய மட்டும் கட் பண்ணி வெச்சுக்கலாம், தேவையானபோது தடவி கொடுத்து இளமை ஆகிக்கலாம்ன்னு  கட் பண்ணினாளாம். உடனே கட் பண்ணின அந்த முடி கருப்பா போயிடுச்சாம். கூடவே இவ இளமையும் போயிடுச்சாம். அதனால, அந்த கிழவி குழந்தையையே கடத்திட்டு போய்ட்டாளாம். 

ராஜாவும் எங்கெங்கோ தேடி பார்த்தாராம். குழந்தை கிடைக்கவே இல்லையாம். ராஜாவும் ராணியும் ரொம்ப வருத்தப்பட்டு, குழந்தையோட பர்த்டே அன்னைக்கு குழந்தைக்காக பறக்கும் விளக்கு தயார் பண்ணி, அதை குழந்தை எங்க இருந்தாவது பார்த்து நம்மகிட்ட வரும்னு ஒவ்வொரு வருஷமும் பறக்க விட்டாங்களாம். 

ரொம்ப வருஷம் ஆச்சாம். யாருக்கும் குழந்தை பத்தி தெரியவே இல்லையாம். கடத்திட்டு போன கிழவி, குழந்தையை, ஊருக்கு வெளில, காட்டுக்கு நடுவுல, ஒரு பெரிய்ய்ய்ய டவர் மேல பத்திரமா வெச்சு வளர்த்துகிட்டு வந்தாளாம். அந்த குழந்தைகிட்ட 'உன் அம்மா நான்தான். இங்க இருந்து வெளில எங்கயும் போகாத. வெளில போனா, ரொம்ப மோசமான அரக்கர்கள் இருக்காங்க. அவங்க உன்னை கடிச்சு சாப்டுடுவாங்க. உன் இந்த அழகான முடிய கட் பண்ணி எடுத்துட்டு போய்டுவாங்க' அப்படி இப்படின்னு கதை சொல்லி நம்ப வெச்சு வெளிய எங்கயும் போகாம பார்த்துகிட்டாளாம்.

 நாளாக ஆக, குழந்தையும் வளந்துடுச்சாம், அதோட முடியும் ரொம்ப நீளமா வளந்துடுச்சாம். எவ்ளோ நீளமா வளந்ததுன்னா அந்த கிழவி டவர் மேல போக இருந்த கதவை எல்லாம் அடைச்சுட்டு, இந்த பொண்ணோட முடியை புடிச்சு கீழ இறங்கற அளவு வளந்துடுச்சாம். எங்கயாவது போயிட்டு வந்து, அந்த பொண்ண  கூப்பிடுவா. உடனே அந்த பொண்ணும் தன் தலைமுடிய மேல இருந்து  கீழ தொங்க போடுவாளாம். அதை புடிச்சுட்டு இந்த கிழவி மேல வந்துடுவாளாம். தினமும் அந்த பொண்ணோட முடியை தொட்டு தடவரதால, அந்தபொண்ணுக்கு இவள் கிழவிங்கற விஷயமே தெரியாது.
 கிழவி வெளியே போற நேரத்துல சின்னபொண்ணுக்கு போரடிக்கும் இல்லையா? அதனால அவ வீடு முழுக்க தனக்கு புடிச்ச விஷயங்கள ஓவியமா வரைஞ்சு வெச்சா. மஞ்சள் கலர்ல பூ பூவா வரைவா, சூரியனை வரைவா, முக்கியமா மலைக்கு பின்னாடி ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் தெரியும் பறக்கும் விளக்குகளையும் வரைஞ்சு வெச்சாளாம்.. 

எப்பவாச்சும் வெளி உலகத்த பார்க்கனும்னு அந்த பொண்ணுக்கு ஆசை வருமாம். பயந்துகிட்டே கிழவி கிட்ட பர்மிஷன் கேட்பாளாம். ஆனா, எப்பவும் கிழவி அவளை வெளியுலகம் பத்தி பயங்கரமான கதைகள் சொல்லி பயப்படுத்தி, அம்மாகிட்ட இருக்கறது தான் உனக்கு பாதுகாப்புன்னு சொல்லி அடக்கிடுவாளாம். இப்படி போயிட்டு இருந்த கதைல நம்ம ஹீரோ என்ட்ரி.

ஹீரோ ஒரு பிரபல திருடன். அவன் படத்தை ஊர் பூரா நோட்டீஸ் அடிச்சு ஓட்டி, அவனை புடிச்சு குடுத்தா பல லட்சம் பரிசுன்னு அறிவிச்சிருந்தாங்களாம் . அவன்கூட ரெண்டு பேர். மூணு பேரும் சேர்ந்து ஒருநாள் அரண்மனைல இருக்கற இளவரசியோட கிரீடத்தை திருடிட்டாங்களாம் . அரண்மனை காவலாளிகள் எல்லாரும் தொரத்தினாங்களாம் . இவங்க மூணு பேரும் தப்பிச்சு ஓடினாங்களாம் . எங்க போனாலும் இவன் நோட்டீஸ் வேற. கடுப்பான ஹீரோ போற வழில இருக்கற நோட்டீஸ் எல்லாம் கிழிச்சு போட்டானாம்.  காவலாளிகள் நெருங்கவும் அவசரத்துல ஒரு நோட்டீஸ கிரீடம் இருக்கற பைல போட்டுட்டு  ஓடினானாம். மத்தவங்க ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு, அவன் கிரீடத்தோட காட்டுக்குள்ள தப்பிச்சு போயிட்டானாம். அப்ப ஒரு குகைக்குள்ள புகுந்து அதோட மறுபக்கம் வந்து பார்த்தா, இந்த டவர் இருக்கு. உடனே அந்த டவர்ல கஷ்டப்பட்டு ஏறி மேல வரானாம்.

உள்ளே நுழைஞ்சதும் படார்னு அந்த பொண்ணு சமையல் பாத்திரத்திலேயே ஒரு அடி போடுது. அவன் மயங்கி விழுந்துட்டானாம். அதுதான் அந்த பொண்ணு முதல் முறையா பார்க்கற ஆளாம். ஆனா, அவனுக்கு அம்மா சொன்னது போல அரக்கர்களுக்கு இருக்கற மாதிரி பல்லு இல்லை, முட்டை கண்ணு இல்ல. இவன் பார்க்க அழகா இருந்தானாம். இருந்தாலும் அம்மாகிட்ட இவனை காட்டணும்னு சொல்லி அவனை ஒரு பீரோல போட்டு அடைச்சு வெச்சுட்டாளாம். அவன் கொண்டு வந்த பையில இருந்த கிரீடத்தை தலைல வெச்சு பார்த்தா, அவ்ளோ அழகா இருந்துச்சாம். சரின்னு அந்த கிரீடத்தை ஒளிச்சு வெச்சுட்டாளாம். 

கொஞ்ச நேரமானதும், கிழவி வீட்டுக்கு வந்ததும் இவனை பத்தி சொல்ல வர்றா. ஆனா, அந்த கிழவி இவ வெளில போறதை பத்தி கேக்க வர்றான்னு, வெளில இருக்கற ஆளுங்க இப்படி அப்படின்னு சொல்ல, அதெல்லாம் பொய்ன்னு இந்த பொண்ணு புரிஞ்சுக்கறாளாம். அதனால அவனை பத்தி சொல்லாம விட்டுடறாளாம். அந்த கிழவி'நகரத்துல பண்டிகை. அதனால நான் திரும்ப வர ரெண்டு நாள் ஆகும்' னு சொல்லிட்டு போன பிறகு, இவனுக்கு மயக்கம் தெளிய வெச்சு, தன்னையும் அந்த பண்டிகைக்கு கூட்டிட்டு போனால், கிரீடத்தை திருப்பி தரேன்னு சொல்றாளாம். அவனும் முதல் முறையா அவளை அந்த டவர விட்டு இறக்கி ஊருக்குள்ள கூட்டிட்டு போறானாம்.

வாழ்க்கையில் முதல் முறையா அவள் அந்த டவர விட்டு கீழ இறங்கி புல் தரைல கால் பதிக்கறா, ஆத்து தண்ணில நடந்து பார்க்கறா, மரத்து மேல ஏறி பார்க்கறா, எல்லாமே முதல் முறையா, அதிசயமா, ஆனந்தமா இருக்காம்...இவ சந்தோஷமா நகரத்தை நோக்கி போற போது, அங்க அவங்க அம்மா வழிதவறிய அரசாங்க குதிரைய பார்த்துட்டு, முன்னாடி பூவை பறிச்சுட்டு போன மாதிரி இந்த முறை அந்த பொண்ணை தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்றதுன்னு வேகமா டவருக்கு திரும்ப போய், அவளை கூப்பிட்டு பார்க்கறாளாம். அந்த பொண்ணு வரலையாம். உடனே, அடைச்சு வெச்ச கதவை எல்லாம் திறந்து மேல போய் பார்த்தா, எங்கயுமே பொண்ண காணோமாம். என்னடா பண்றதுன்னு திகைச்சு போய் திரும்பி பார்த்தா, ஒரு பெட்டிக்குள்ள என்னமோ மின்னுதாம். எடுத்து பார்த்தா, ஒரு பை. அதில கிரீடமும், ஹீரோவோட நோட்டீசும். இவங்கள எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு டவர்ல இருந்து இறங்கி பொண்ணை தேட ஆரம்பிக்கறாளாம்.

வழியில ஹீரோவும் இந்த பொண்ணும் ஒரு குகைக்குள்ள மாட்டிக்கறாங்களாம் . அங்க இருந்து வெளிய வர வழி கண்டுபிடிக்க முடியாத அளவு இருட்டாம். அப்ப, அந்த பொண்ணு தன்னோட முடி பத்தி சொல்லி, பாட்டு பாடினா முடியில வெளிச்சம் வரும்னு சொல்லி பாட்டு பாட, முடியில வெளிச்சம் வந்து அவங்க தப்பிக்க வழி தெரியுது. அது வழியா ரெண்டு பேரும் தப்பிச்சுட்டாங்களாம்.

அதுக்குள்ள அங்க என்ன ஆகுது, அந்த கிழவியும்  ஹீரோவோட ரெண்டு கூட்டாளிகளும் சந்திச்சு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கறாங்களாம். கிழவி கிரீடத்தை குடுத்து, 'இந்த கிரீடத்தை விட ஹீரோவ புடிச்சு குடுத்தா அதிக மதிப்பு, அதனால அவன நீங்க புடிச்சுட்டு போங்க, கிரீடத்தையும் வெச்சுகோங்க, என் பொண்ணை மட்டும் என்கிட்டே குடுத்துடுங்க'ன்னு சொன்னாளாம். சரின்னு அவங்களும் ஒத்துக்கிட்டாங்களாம்.

அங்க குகைல இருந்து தப்பிச்ச சமயம், ஹீரோ கையில காயம் ஆகிடுது. அதை அந்த பொண்ணு முடில சுத்தி பாட்டு பாட, முடி ஜொலிச்சு, காயம் சரியாகிதாம். அவன் அதிசயப்பட்டுட்டே, தூங்க போயிடறான். அப்ப, கிழவி அங்க வந்து, இந்த பொண்ணுகிட்ட, 'அம்மாவை நம்பாம அவனை நம்பறல்ல... அவன் உன்னை ஏமாத்திடுவான் பாரு'ன்னு  சொல்லிட்டு போறா.

அடுத்த நாள் ஊருக்குள்ள போய் பார்த்தா, ஊர்ல எல்லாரும் சாதாரண மனுஷங்களா, அரக்கர்கள் மாதிரி இல்லாம, அன்பா, சந்தோஷமா இருக்கறாங்க. ஒரு ராஜா ராணி குழந்தை ஓவியம் வரைஞ்சு வெச்சிருக்கறத பார்க்கற இந்த பொண்ணுக்கு அவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. அங்க இருக்கற கொடி எல்லாம் சூரியன் கொடி. அன்னைக்கு நைட்டு எல்லோருடனும் சேர்ந்து இவளும் பறக்கும் விளக்கை வானத்துல பறக்க  விடறா.
 
அப்ப வழில ஹீரோ தன்னோட ரெண்டு கூட்டாளிகளையும் பார்க்கறான். அவங்களால எந்த தொல்லையும் வரக்கூடாதுன்னு, இந்த பொண்ணுகிட்ட 'இரு இரு... அவங்க கிட்ட பேசிட்டு வந்துடறேன்'ன்னு சொல்லிட்டு அவங்க கிட்ட போறான். அவங்க இவனை அடிச்சு ஒரு போட்ல கட்டி போட்டு அரண்மனை பக்கமா அனுப்பிட்டு, இந்த பொண்ணை புடிக்க வராங்களாம். இந்த பொண்ணு பயந்து போய் கத்த, அந்த கிழவி வந்து இவனுங்கள அடிக்கற மாதிரி ஆக்க்ஷன் பண்ணி, அந்த பொண்ணுகிட்ட 'அதோ பார். அவன் உன்னை இவங்க கிட்ட புடிச்சு குடுத்துட்டு போய்ட்டான்'ன்னு சொல்லி காட்டறா. நிலா வெளிச்சத்துல பார்த்து இவளும் நம்பிடறாளாம். அழுதுகிட்டே அம்மா கூட டவருக்கு போயிடறாளாம்.

அங்க வீட்டுல தனியா யோசிச்சு பார்த்தா, இவளுக்கு பழைய நினைவு திரும்பி வந்துடுது. தன்னை அந்த படத்துல இருந்த ராஜா ராணி கொஞ்சினது, தனக்காக விளக்கு விட்டது, குழந்தைல பார்த்த சூரியன் கொடி, எல்லாம் ஞாபகத்துக்கு வருது. இளவரசி நான் தான் னு தெரிஞ்சு கிழவி கிட்ட சண்டை போடறா. உடனே கிழவி இவள கட்டி போட்டு வெச்சுடறா.

அங்க ஹீரோ, அரண்மனைல இருந்து தப்பிச்சு, டவருக்கு வந்து இவள கூப்பிடரானாம். அவளோட முடி வந்து விழுகுது, அதை புடிச்சுட்டு இவன் மேல போய் பார்த்தா, அவளை கட்டி போட்டுருக்காங்க. அதை பார்த்து அதிர்ச்சி அடைஞ்சு இவன் நிக்கும்போது, பின்னாடி இருந்து ஒரு கத்தில இவனை கிழவி குத்திடறா. உடனே அந்த பொண்ணு, 'அவனை காப்பாத்த விடு. வாழ்நாள் முழுக்க உன்கூடவே இருந்திடறேன். எங்கயும் போக மாட்டேன்னு' சத்தியம் பண்றா.

சரின்னு அந்த கிழவி விட, இவ தன் முடிய வெச்சு அவனை குணப்படுத்த பார்க்கறா. அப்ப, அவன் சடார்ன்னு தன்னோட கைல இருந்த கண்ணாடி துண்டால, அவளோட நீஈஈஈஈஈஈஈஈஈஈளமான முடிய கட் பண்ணிடானாம். அப்படியே அவளோட எல்லா முடியும் கருப்பா போய்டுதாம். அதோட சக்தியும் போய்டுதாம். அதிர்ச்சில ஓடி வரும்போது கிழவி கால் தடுக்கி ஜன்னல்ல இருந்து கீழ விழுந்து செத்து போயிடறா. ஹீரோவும் செத்து போயிடறான். அவனுக்காக இந்த பொண்ணு அழுகறப்ப அவளோட கண்ணீர் துளி அவன் மேல விழுந்து, அது அவனுக்கு உயிர் குடுத்துடுமாம். அவ முடில மட்டும் சக்தி இல்ல. முழு உடம்பிலும் சக்தி இருக்காம். அப்பறம், ஹீரோ அவளை ராஜா ராணிட்ட கூட்டிட்டு போய் விட்டுடுவானாம். அவங்க ஹீரோவை இளவரசிக்கே கட்டி குடுத்துடுவாங்க . அதோட கதை முடிஞ்சுதாம்.



நல்லா இருக்கா? இதான் 'TANGLED' அப்படிங்கற 3D கார்டூன் படத்தோட கதை. இந்த முழு கதையும் கார்டூன்கறது சில இடத்துல தான் தெரியும். மத்தபடி, அந்த பொண்ணோட முடி கூட, ஒரிஜினல் மாதிரி தான் இருக்கும். அவ்ளோஓஓஓஓஓஓஓஓஓ நீள முடி செம அழகா இருக்கும். ஒரு சீன்ல அருவியும் இவ முடியும் ஒரே பக்கமா விழுகற மாதிரி காட்டுவாங்க. அவ்ளோ அழகு. Free time கிடைச்சா download செஞ்சு பாருங்க. அந்த முடியை நீங்களும் ரசிப்பீங்க.
 

Monday, August 15, 2011

'என்னத்த சுதந்திரம் வாங்கி...' கட்சியா நீங்கள்?

உங்களுக்காகத்தான் இந்த பதிவு...
 
68  வருஷத்துக்கு முன்னாடி இந்த காந்தி தாத்தா பண்ணின தப்பு சுதந்திரம் வாங்கி குடுத்தது. வெள்ளைகாரங்க ஆட்சில எல்லாம் ஒழுங்கா நடந்துட்டு இருந்துது. நம்ம ஆளுங்க பெருசா கழட்டுற மாதிரி 'சுதந்திரம் குடு சுதந்திரம் குடு' னு வாங்கி எல்லாத்தையும் வீணாக்கிட்டாங்க. இப்ப மட்டும் நாம என்னமோ அடிமை இல்லாத மாதிரி சுதந்திர தினம் கொண்டாடுறோம். இப்பவும் நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு அடிமையாதான இருக்கோம். எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, இன்னும் என்னெல்லாம் நாட்டை கெடுக்க முடியுமோ அத்தனையும் நடக்குது. இதுக்கு பேசாம ஆங்கிலேயருக்கே  அடிமையாவே இருந்திருக்கலாம். விதவிதமா வசதிகளாவது கிடைச்சிருக்கும்

                   இப்படி பேசுபவர்களிடம் பொதுவான வெறும் ஐந்து கேள்விகள். இந்த கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று பதிலளித்தால் போதுமானது. பதில்களை உங்கள் மனசாட்சி படி உங்களுக்குள் சொல்லிக்கொண்டால் போதும்
    1 . Traffic Signal லில் (எனக்கு முன் யாரும் இல்லாத நிலையில்) கோட்டுக்கு முன் என் வண்டியின் நிழல் கூட விழாது. பச்சை விழுவதற்கு முன் அல்லது 0 நொடிக்கு முன் நான் வண்டியை கிளப்புவதில்லை.
     
    2.  தியேட்டரில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நான் க்யூ முறையையே பின்பற்றுகிறேன். உதா: ரேஷன் கடை, கோவில், இன்ன பிற இடங்கள்.
     
    3. இதுவரை அரசு அலுவலகங்களில் நான் லஞ்சம் கொடுக்க மறுத்து, எவ்வளவு நாள் ஆனாலும், நேர்மையான வழிமுறையிலேயே எனக்கு தேவையான ஆவணங்களை பெற்றிருக்கிறேன்.
     
    4. கல்வியறிவு இல்லாதவர் யாரேனும் எனக்கு தெரிந்தவராக இருந்தால், அவருக்கு என்னால் முடிந்தவரை  குறைந்தபட்சம் உயிரெழுத்து மெய்யெழுத்து மட்டுமாவது கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
     
    5. என் வீட்டு குப்பையை பக்கத்து வீட்டுக்கு தள்ளி என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போலல்லாமல், நிஜமாகவே என் வீட்டை போலவே என் தெருவையும் என்னால் முடிந்த அளவு சுத்தமாக வைத்திருக்கிறேன். உதா: தெரு குண்டும் குழியுமாக  இருந்தால், அதை என் போன்ற அக்கறையாளர்களுடன் சேர்ந்தோ தனியாகவோ அடைக்கிறேன். குறைந்தபட்சம் முனிசிபாலிடியில் புகாராவது செய்கிறேன். 
     
       ஆம் என்று பதில் சொன்னவர்கள் மேற்கொண்டு புலம்பலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. (இவர்கள் புலம்புவதில்லை என்பது என் கணிப்பு)

      ஒருவேளை மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள்
      1. signal பார்த்துக்கிட்டு wait பண்ணிட்டு இருந்தா, எனக்கு நான் போற வேலை முடிஞ்ச மாதிரிதான். Moreover, நான் வெயிட் பண்ணி நின்னுட்டு இருந்தா, எனக்கு பின்னாடி இருக்கறவனுங்க போற வேகத்துல என்னை அடிச்சுபோட்டு போய்ட்டே இருப்பானுங்க.
      2. ஐயோ... க்யுவா ? அது எனக்கு அலர்ஜி. அதனாலதான் நான் எங்க போனாலும் சிறப்பு டிக்கெட் வாங்கிடுவேன். இல்லாட்டி புகுந்தடிச்சு உள்ள புகுந்துவேன். வலிமையுள்ளவருக்கே உலகம் சொந்தம்ன்னு நம்பற ஆளு நான்.
      3. கிழிஞ்சுது போங்க... காசு குடுத்தோமா வேலைய ஒரே நாள்ல முடிச்சோமா னு இல்லாம... அவனுங்க எத்தன நாள் இழுத்தடிப்பாங்க தெரியுமா? ஆபீஸ்ல லீவ் யாரு உங்க அப்பனா தருவான்? அந்த loss of pay க்கு பயந்துட்டு தான ஒரே நாள்ல காசை குடுத்து வேலைய முடிக்கறோம்
      4. என்னது? class எடுக்கறதா? நான் என் குழந்தைக்கே டியுஷன் தான் வெச்சிருக்கேன். இதுல எவன் படிச்சா என்ன? நாசமா போனா என்ன?
      5. C'mon Dude! R u Crazy? நான்? ரோட்ல வேலை செய்யறதா? நான் இன்ன கம்பெனில இன்ன வேலை பாக்கறேன். என் மானம் மரியாதை என்ன ஆகறது? இதெல்லாம்  அரசாங்கத்தோட வேலை. எதாவது  பிகர் நம்பர் வேணா கஷ்டப்பட்டு  அவனை  புடிச்சு இவனை புடிச்சு கண்டுபிடிப்பேனே  தவிர, இந்த மாதிரி முனிசிபாலிடி நம்பரெல்லாம் யாரு கண்டுபிடிச்சுட்டு இருக்கறது?
      என்று  இருந்தால்  புலம்ப தகுதி இல்லாதவர்கள் என்று உங்களுக்கே தெரிந்துவிடும். 
                 நம் அனைவருக்கும் அடிப்படை உரிமை அடிப்படை உரிமை என்று வாய் கிழிய கத்துகிறோமே... நம்மில் எத்தனை பேருக்கு அடிப்படை கடமைகள் பற்றி தெரியும்?
      1. தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்கணு ம்.
      2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதிக்கணு ம்..
      3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை பின்பற்றி நடக்கணு ம்..
      4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்கணு ம். நாட்டுக்காக தேவைப்படும்போது, சேவை செய்ய தயாராக இருக்கணு ம்.
      5. அனைவரும் சாதி, மத, மொழி, இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்கணு ம்.
      6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்கணு ம்.
      7. காடுகள், நதிகள், ஏரிகள்  உள்ளிட்ட இயற்கையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கணு ம்..
      8. அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்கணு ம்..
      9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துகளை பாதுகாக்கணு ம்..
      10. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தரணு ம்.
                      இந்த கடமைகளை ஒண்ணு ரெண்டு இல்ல, எல்லாமே பின்பற்றுபவர்கள் மட்டுமே புலம்புங்க. மத்தவங்க,  இந்த கடமை எல்லாம் செஞ்சுட்டு அப்பறம் புலம்பலாம். இந்த கடமைகளையும் செய்யும்போது அதில் நாடு சார்ந்த சுயநலம் இருக்கிறதா? நம்மை மட்டுமே சார்ந்த சுயநலம் இருக்கிறதா என்று கவனித்து செய்யுங்க. 
       
      உதாரணமா, நம்மில் பலர் கடைசி கடமையை முழு மூச்சா செய்யறோம்.அதுக்கு நாடு சார்ந்த நலனை விட, நம்மளோட குழந்தை நல்லா படிச்சா, நிறைய சம்பாதிக்கும் அப்படிங்கற எண்ணமே மேலோங்கி இருக்கும். யாருக்காவது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்து, அவர்களில் ஒருவரையாவது இராணுவ சேவை அல்லது விவசாயம் அல்லது குறைந்த கட்டணத்திலோ இலவசமாகவோ சேவை செய்யும் துறை போன்ற ஏதேனும் ஒரு துறைக்கு அனுப்ப மனம் வருகிறதா? (எனக்கு இப்போதைக்கு நினைவுக்கு வந்த துறைகளையே எழுதியுள்ளேன். உண்மையில் நிறைய துறைகள் உள்ளன. Where there is a will, there is a way). நான் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பதை விட நாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? 

      இத்தனைக்கும் இந்த பதிவை நான் உண்மையில் குறுகிய கண்ணோட்டத்தில் தான் எழுதி இருக்கிறேன். அதற்கே நாம் வெட்கப்படவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் புலம்புகிறோம்?
      இந்தியா முன்னேற தடையாக உள்ள விஷயம் ஊழல், லஞ்சம், அரசியல்வாதி கிடையாது. 

      உண்மையான காரணம் நம்மோட சுயநலம் தான்.

      எல்லாருக்கும் சுயநலம், எல்லா விஷயத்திலும் சுயநலம்.

      'எனக்கு மட்டும் முன்னுரிமை கிடைக்கணும், நான் முதல்ல அனுபவிக்கணும்'. இந்த எண்ணத்தை எப்ப மாத்துறோமோ, அப்ப தான் நம்ம நாடு பற்றி நாம பெருமைப்படும் நிலைமையை அடைவோம். 

      Anyway, சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! இந்தியனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவோம்! ஜெய் ஹிந்த் !

      Tuesday, August 9, 2011

      புத்தக கண்காட்சியில் ஒருநாள்...

      ஆச்சரியமா இருக்கு. மாசம் பத்து பதிவு போட்ட காலம் மலையேறி போனது போல ஒரு பீலிங். இந்த வருஷ பதிவு லிஸ்ட மன்த்வைஸ் பாத்தா, மாசத்துக்கு  வெறும் ஒரே ஒரு பதிவு  மட்டுமே கூட போட்டிருக்கேன். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. பதிவு எழுத ஆரம்பிச்ச புதுசுல மாஞ்சு மாஞ்சு யோசிப்பேன். எதெல்லாம் வித்யாசமா தோணுதோ, எதெல்லாம் புது அனுபவமா இருக்கோ அதெல்லாம் சகட்டு மேனிக்கு டைப் பண்ணிட்டு இருந்தேன். இந்த வருஷம் என்ன ஆச்சுன்னே தெரில... பதிவெழுத வளையவே மாட்டேங்குது. இப்பவும் புது புது அனுபவங்கள் கிடைக்குது தான். ஆனா நெட் ஓபன் பண்ணவே கடுப்பா இருக்கு.  நேர்மையா சொல்லனும்னா பின்னூட்டம் போடாட்டி நம்மள மறந்துடுவாங்கன்னே அதையாவது போடறேன். நாமதான் இப்படி ன்னு நெனச்சு என்னோட சேர்ந்து பதிவெழுத ஆரம்பிச்சவங்களோட லிஸ்ட பார்த்தா பெரும்பாலும் அங்கேயும் அதே கதை இருந்தது தான் இந்த ரணகளத்துலயும் ஒரு ஆறுதல்

      Leave it...
      By the way, எங்க ஊர்ல திருவிழா... உடனே 'பெரிய மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்த போறோம்' னு டொனேஷன் கேக்க போறேன்னு நினைச்சுக்காதீங்க . நான் சொன்ன திருவிழா 'புத்தக திருவிழா' .
      ஒவ்வொரு வருஷமும் ஆசை ஆசையா காத்துகிட்டு, காசு சேர்த்து வச்சுகிட்டு, நான் காத்திருப்பது இந்த விழாவுக்காகதான். போன 6 வருஷமா எனக்கு முழு ஸ்டால்களையும் பார்ப்பது முடியாத காரியமா இருந்துச்சு. கூட கூட்டிட்டு போற ஆளுங்க அப்படி. 'கிளம்பலாம் கிளம்பலாம்'னு என்னை இழுத்துட்டு தான் வெளில வருவாங்க. இந்த வருஷம் தான் ரெண்டு முறை போனேன். அதுவும் என்போல் கமிட்மென்ட் இல்லாத புத்தக காதலர்களுடன். திணற திணற புத்தகங்களை பார்த்து ரசித்தேன். வாங்கி மகிழ்ந்தேன். நான் பாலகுமாரனின் வாசகி. நான் முதன்முதலில் படித்த அவருடைய நாவல் 'கனவு குடித்தனம்'. சோகம்  என்னவெனில், அந்த நாவலை இன்றுவரை முழுமையாக படிக்கவில்லை. (அந்த கதைக்கு தனி பதிவு போடுகிறேன்.)
       அந்த நாவலை வாங்க மட்டும் ஏனோ இன்னும் மனம் வரவில்லை. ஒவ்வொருவருடமும் புத்தக கண்காட்சிக்கு போவேன், இந்த புத்தகம் இருக்கா என தேடுவேன், எடுத்து பார்த்துவிட்டு வைத்து விடுவேன். ஒருவேளை படித்து முடித்துவிட்டால் அந்த புத்தகத்தின் மேல் உள்ள காதல் குறைஞ்சுடுமோ? தெரியல...

      பதிவர் இராஜ ராஜேஸ்வரி ( மணிராஜ்) குறிப்பிட்டுள்ளது போல "வாசிப்பது என்பது சுவாசிப்பது. வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்" என்ற வரிக்கேற்ப பல
      சுவாசிப்பவர்களை இங்கே காண முடிந்தது...

      புத்தக திருவிழாவில், நான் கவனித்த வகையில்
      * பெரும்பாலும் பெண்கள் இன்னும் சமையல் குறிப்பு, மெகந்தி டிசைன் புத்தகங்களையே வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

      * கொஞ்சம் கீழ்தட்டு இளைஞர்கள் ஜோதிட புத்தகத்தையும், வாழ்வில் ஜெயிப்பது எப்படி என்று கேட்பது போன்ற தன்னம்பிக்கை புத்தகங்களையும் வாங்குகிறார்கள்.

      *  கவர்மென்ட் வேலை தேடுபவர்கள் பொதுஅறிவு புத்தகங்களை வாங்கி தங்களை exhibit செய்கிறார்கள்.

      * குழந்தைகளின் சாய்ஸ் கலர் அடிக்கும் புத்தகங்கள்.

      * குடும்பத்தலைவர்கள் டிவியில் பார்த்தவர்களின் படம் இருக்கும் புத்தகங்களை புரட்டி, விலையை பொறுத்து வாங்குகிறார்கள்.

      * கூட்டமான இடம் என்பதால் வயதானவர்கள் குறைவு. வந்தவர்கள் கம்பராமாயணமும் சுந்தரகாண்டமும் தேடுகிறார்கள்.

      * அதிலும் இசம் புத்தகங்கள் (அதாங்க கம்யுனிசம், மார்க்சிசம்) ம்ஹும்.... காற்று வாங்குகிறது.

      *   பொருளாதார ரீதியாக செட்டில் ஆன இளைஞர் கூட்டமே இலக்கியம் பக்கம் போகிறது. பெருமையாக 'இது இரண்டாவது முறை, மூன்றாவது முறை வருகிறேன்' என்றும், 'ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன் இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்' என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக இருந்தது... 

       தபூ ஷங்கர் போன்றோரின் கவிதைகளை ஒவ்வொரு ஸ்டாலிலும் கொஞ்சம் கொஞ்சம் படித்து புத்தகத்தை கண்காட்சியிலேயே படித்து முடித்தவர்களும் இருந்தார்கள்.

       பிரபாகரன், ஹிட்லர், சே குவேரா போன்ற புத்தகங்களை பிரித்து பார்த்து ஒரு தடவு தடவி வைத்தவர்களும் இருந்தார்கள்.

      'மச்சி... அதோ அந்த ஸ்டால்ல பிகர் கூட்டம் மச்சி. நீ இங்க என்ன பண்ற?' என்று நண்பனின் புத்தக தேடலுக்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் இருந்தார்கள்.

       'சூ... சும்மா அழ கூடாது. முதல் கடைலயே புத்தகம் வாங்கிடகூடாது. கடைசி வரைக்கும் பார்த்துட்டு எந்த கடைல கம்மியா இருக்கோ அங்க தான் வாங்கணும்' என்று கலர் அடிக்கும் புத்தகம் கேட்டு அழுத குழந்தையை சமாதானபடுத்திய  தந்தைகளும் இருந்தார்கள்.

      கலவியல் சம்பந்தமான புத்தகங்களை கூட்டம் இல்லாத ஸ்டாலின் மூலையில் நின்று யாருக்கும் தெரிந்து விடகூடாது என்ற பதைபதைப்புடன் படித்தவர்கள் இருந்தார்கள்.
      'என்ன புத்தகம் வாங்கின?' என்று கேட்கும் தெரிந்தவர்களிடம், பெருமையாக டிக்சனரியையும், அட்லசையும் காட்டும் பள்ளி செல்லும் பையன்கள் இருந்தார்கள்.
       திடீரென்று தன் பெயர் சொல்லி கூப்பிடும் தெரிந்த அக்காவின்  குரல் கேட்டு திரும்பிபார்க்கும் பெண், அந்த அக்காவுக்கும் புத்தக கண்காட்சி வரும் அளவு புத்தகத்தின் மீது ஆர்வம் இருக்கும் என தெரிய வந்த வியப்பை புருவம் தூக்கி காட்டும் வியப்பின் வெளிப்பாடும் இருந்தது.

       ஒன்றாக படித்தவர்கள், குடியிருந்தவர்கள், வேலை செய்தவர்கள் என பல பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட்டுகொண்டே இருந்தன.
      வெளியே இருந்த கேண்டீனில், அநியாய விலையில் சுகாதாரம் குறைந்த சூழலில்  ஜிகர்தண்டா, மிளகாய் பஜ்ஜி, பானிபூரி எல்லாம் சக்கைபோடு போட்டு விற்பனை ஆகிக்கொண்டிருந்தன.
       என் வாழ்வில் முதலும் கடைசியுமாய் ஜிகர்தண்டாவை ருசித்தேன். இவ்வளவு கேவலமாக இருக்கும்ன்னு நெனைக்கவே இல்லை. ஒருவேளை அதை செய்து கொடுத்தவர் சரியாக கலந்து கொடுக்கவில்லையோ என்னவோ. (இந்த லைன் ஜிகர்தண்டா ரசிகர்கள் யாரேனும் இருந்தா, அவங்களை சமாதானபடுத்த. I have no guts to taste it again உவ்வே ...   ) 

       இப்பேர்பட்ட திருவிளையாடல்கள் நடந்தேறிய எங்கள் ஊர் புத்தக திருவிழா இனிதே இன்றுடன் முடிந்தது....

      Monday, July 25, 2011

      விர்சுவல் வில்லேஜர்ஸ்

      எனக்கு மறுபடியும் பைத்தியம் பிடிச்சுடுச்சு. அட.... ஆமாங்க... இந்த விர்சுவல் வில்லேஜர்ஸ் ன்னு ஒரு கேம் இருக்கே தெரியுமா? அந்த கேம்க்கு நான் கிட்டத்தட்ட அடிமை... இதுவரை ஐந்து வெர்ஷன் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் அந்த ஐந்தாவது வெர்ஷன் வெளிவந்துள்ளதை தெரிந்துகொண்டு, டவுன்லோட் செய்து,  மாங்கு மாங்கென்று விளையாடிக்கொண்டு இருக்கிறேன். அப்படி என்ன இருக்கு இந்த கேம்லன்னு கேக்கறீங்களா? 

      விர்சுவல் வில்லேஜர்ஸ் - என்ற இந்த விளையாட்டு உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களால் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டு மிக வித்யாசமானது. பேஸ்புக்கின் 'Farm ville' வை போல  நாம் கம்ப்யுட்டரை அணைத்து விட்டாலும் வேலை நடந்துகொண்டே இருக்கும். ஆனால் farm ville க்கும் இதற்கும் பல வித்தியாசங்கள். Farm ville வில் நாம் விவசாயம், அறுவடை சம்பந்தமான செயல்களை மட்டுமே திரும்பத்திரும்ப செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் விர்சுவல் வில்லேஜர்ஸ் டோட்டலி டிபரென்ட். 


      சில பழங்குடியினர் தங்கள் தீவில் எரிமலை வெடித்ததால் அங்கிருந்து தப்பி ஆளரவமற்ற, இயற்கை எழில் கொஞ்சும் 'ஐஸோலா'  என்னும் தீவுக்கு வந்து சேர்கிறார்கள். அப்படி வந்தவர்கள், அந்த தீவில் தங்களின் உடனடி தேவையான உணவை தேடிக்கொள்வதுடன், பதினாறு புதிர்களையும் வெற்றிகொள்ள வேண்டும். இது தான் விளையாட்டு.
       
      மற்ற விளையாட்டுகளை போல சுடுதல், கொல்லுதல் போன்ற விஷயங்கள் இல்லாததால், அநேகமாக ஆண்களுக்கு பிடிக்காது. (சில பெண்களுக்கும்:-)) ஆனால் தங்களுடைய மேலாண்மை திறனை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் இந்த விளையாட்டை விரும்புவார்கள்.
       


      முதன்முதலில் இந்த விளையாட்டை விளையாடும்போது, நான் விளையாண்ட விளையாட்டுகளிலேயே இது வித்யாசமாக இருக்கே என்று ஆசை ஆசையாக விளையாடினேன். அடுத்த நாள் பெரிய இவளாட்டம் அம்மாவிடம், 'என் ஆளுங்களுக்கு எல்லாம் சாப்பாடு போடணும், நான் சீக்கிரமா போகணும்'ன்னு சீன் காட்டிட்டு வந்து பார்த்தா... என் மக்கள் அத்தனை பேரும் ஒரே நாளில் இறந்து விட்டார்கள். காரணம், நான் தூங்க போகும்போது கேமை pause வைக்கவில்லை.அதன்பின் சோகத்துடன், மீண்டும் ரீஸ்டார்ட் செய்து வேறு ஆட்களை போட்டு விளையாட ஆரம்பித்தேன். அப்படியும். என்னால் புதிர்களை தீர்க்க முடியவில்லை. அதன் பின் நெட்டில் தேடியபோது அதன் cheat code, puzzle solving methods எல்லாம் கிடைத்தது. அதனை கொண்டு அந்த விளையாட்டை வெற்றிகரமாக முடித்தேன். அதுக்கப்பறம் ஒவ்வொரு வெர்ஷனா டவுன்லோட் செய்து ஒவ்வொரு விளையாட்டையும் முடிப்பதே பொழப்பா கிடந்தேன்.
       




      இந்த விளையாட்டை நான் விளையாடுவதை பார்க்கும் அத்தனை பேரும் காறி துப்பிட்டாங்க... இந்த வயசுல (அதாங்க... கழுதை வயசுல)  சின்ன பிள்ளையாட்டம் இந்த கேமை விளையாடறேன்னு. நாம அதெல்லாம் கண்டுகிட்டதே இல்ல... என் பார்ட்னர் என்னை திட்டி திட்டி வேலை வாங்குவார். ஒரு வழியா நிம்மதியா இருந்த அவரை மீண்டும் டென்ஷன் ஆக்க ஆரம்பித்துள்ளேன். அவர்கிட்ட நான் சொல்ல விரும்பும் ஒரே பஞ்ச் டயலாக் ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......
      ......

      அவங்கள நிறுத்த சொல்லுங்க.... நான் நிறுத்தறேன்...